கோலாலம்பூர் – நஜிப்பை பதவியிலிருந்து விலக்க, எதிர்கட்சிகளுக்கு துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் உதவி தேவைப்படுவதாகக் கூறப்படுவதை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
இது குறித்து வான் அசிசா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “இல்லை.. அது உண்மை இல்லை. அவர் (மகாதீர்) வலிமையோடு இல்லை. அவருக்குத் தான் எங்களுடைய உதவி தேவைப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாரிசானின் ஆட்சி இந்த நாட்டை சேதப்படுத்திவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் தான் டாக்டர் மகாதீர் தலைமையில் மக்கள் பிரகடனம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.
“அது (மக்கள் பிரகடனம்) எந்தச் சூழலிலும் பக்காத்தானின் கொள்கையிலோ மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திலோ மாற்றத்தை ஏற்படுத்தவில்லை”
“அவர் அரசியல் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர். அவர் விடுவிக்கப்பட வேண்டும்” என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.