பெங்களூரு – துமகூரு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவின் போது, ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழுந்ததில் 70 பேர் படுகாயமடைந்தனர். இதில் 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துமகூரு மாவட்டம் கூலுர் அருகேயுள்ள கைவாளாவை அடுத்த ஹெத்தேனஹள்ளி பகுதியில் அமைந்துள்ளது ஆதி சக்தி மாரியம்மன் தேவி கோவில். ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று இந்த கோவிலில் 2 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். 2-ஆவது நாள் காலை தீமிதி திருவிழா நடைபெறும்.
இவ்வாண்டு சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், மாரிம்மனை தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. இன்று காலை தீ மிதி திருவிழா நடைபெறுவதாக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் மாலையில் இருந்தே கோவில் நிர்வாகத்தினர் செய்து வந்தனர். இதற்காக அவர்கள் கோவில் முன்பு 8 அடி நீளம், 5 அகலம், 3 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டி அக்னி குண்டம் தயார் செய்தனர்.
காலை 4.30 மணிக்கு இந்த தீ மிதி திருவிழா தொடங்கியது. கோவில் பூசாரி கும்மஞ்சிபாளையா நாகராஜ் முதலில் நெருப்பில் இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து அதிவேகத்தில் தீயில் இறங்கியதால் ஒருவர் மீது மற்றொருவர் என தடுக்கி விழுந்தனர்.
தீயில் மாட்டி கொண்டவர்களை, மீட்கும் முயற்சியில் போலீசார் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். அப்போது பின்புறம் இருந்த மக்கள் கூட்டம், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மோதி, தள்ளியதில் சுமார் 70க்கும் அதிகமானவர்கள், தீயில் மாட்டி கொண்டனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள், லேசான காயம் ஏற்பட்டவர்களை மீட்டு, அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி உள்பட 20 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மற்றும் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.