சென்னை – கிங் மேக்கராக’ இருப்பதைவிட ‘கிங்’காக இருக்கவே விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொல்கிறார். ஆனால், அவரது நிச்சயமற்ற நடவடிக்கைகளால் கட்சியின் அடிமட்டம் கலகலத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் விஜயகாந்தை வட்டமடித்தன. அப்போது தேமுதிக-வுக்கு 8 தொகுதிகள் தர சம்மதித்தது திமுக.
‘இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் 8 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 அமைச்சர்கள் நிச்சயம்’ என சில நிர்வாகிகள் சொன்னபோது, ‘யாரோ ரெண்டு பேரை அமைச்சராக்குவதற்காக எனது முதல்வர் கனவை முடக்கணுமா?’ என்று கோபப்பட்ட விஜயகாந்த் தனித்து களமிறங்கினார்.
40 தொகுதிகளிலும் சுமார் 33 லட்சம் (10.33 சதவீதம்) வாக்குகளை பெற்றது தேமுதிக. 9 வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்றனர். அந்த 40 பேரில் 33 பேர் இப்போது தேமுதிகவில் இல்லை. ஒரு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்றவர்களில் சுதீஷ் உள்ளிட்ட இருவரைத் தவிர மற்றவர்களும் மாற்றுக் கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து 29 தொகுதிகளை வென்றாலும் தேமுதிக வாக்கு வங்கி 7.88 சதவீதமாக சரிந்தது. விஜயகாந்தின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக பக்கம் சாய்ந்ததால் கட்சி இன்னும் கலகலத்துப் போனது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவால் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை என்பதோடு வாக்கு வங்கியும் 5.14 சதவீதமாக சரிந்தது. இப்படி தொடர் சரிவுகளை சந்தித்தாலும் இப்போது சட்டசபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இந்த கிராக்கியை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் அவர், கூட்டணி பேரத்தை இழுக்கிறார். அனைத்துக் கட்சிகளும் அவரோடு கூட்டணி பேச்சுக்கள் தொடர்வதாக சொல்கின்றன. ஆனால், ‘கேப்டன் யாருடனும் இன்னும் கூட்டணி பற்றி பேசவில்லை’ என அறிவிக்கிறது தேமுதிக. இதையெல்லாம் பார்த்துவிட்டு தேமுதிக தொண்டர்களே குழப்பத்தில் உள்ளார்கள்.
திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் மனநிலைக்கு மாறாக வேறு ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக சிதறுண்டு போகும் என அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
திமுக தரப்பிடம் சுதீஷும் பாஜக தரப்பிடம் பிரேமலதாவும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இந்த இருவரில் ஒருவரை மத்திய அமைச்சராக்க பாஜக சம்மதித்து விட்டதாகவும் தகவல் பரப் பப்படுகிறது. இது, தங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டிக் கொள்ள உதவும் என கணக்குப் போடுகிறது தேமுதிக தலைமை.
ஆனால், உண்மையில் விஜயகாந்தின் இந்த நடவடிக்கைகள் கட்சியின் அடித்தளத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன. தொண்டர்கள் யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
தாங்கள் விரும்பும் கூட்டணியை விஜயகாந்த் அமைக்காவிட்டால் பதவிகளைத் துறந்து மாற்றுக் கட்சிகளில் தஞ்சமடைய ஏராள மான தேமுதிகவினர் காத்துள்ளனர்.
இவர்களை இழுக்க அதிமுகவும், திமுகவும் காத்திருக்கின்றன. விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து இந்தக் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறலாம்.