கோலாலம்பூர் – மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளைக் கருத்தில் கொண்டும் அரசாங்கம் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில், உள்துறை துணையமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமட் வெளியிட்ட தகவல் ஒன்றில், நேபாளிகளை மட்டும் பாதுகாப்புப் பணிகளுக்கு நியமிக்கும் வழக்கத்தை மாற்றி, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இராணுவப் பின்புலம் கொண்டவர்களை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
அதனை முன்வைத்து, நேற்று மஇகா தேசிய இளைஞர் பிரிவு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மஇகா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் சிவராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் பாதுகாப்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பற்றாக்குறையைப் போக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகள் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பது சரியான முடிவல்ல” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட மாதங்களில் மட்டும், சுமார் 40 பாதுகாப்பு பணியாளர்கள் நிறுவனங்களின் உரிமத்தை உள்துறை அமைச்சு இரத்து செய்துள்ளது.
அதோடு, சட்டவிரோத தொழிலாளர்களை பாதுகாப்புப் பணிகளில் நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மேலும் 49 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2016 மார்ச் 1-ம் தேதி வரையில், 347 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம், 1,116 சட்டவிரோத காவலாளிகளையும், 26 முதலாளிகளையும் கைது செய்துள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.