கோலாலம்பூர் – ‘மைந்தன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநரும், நடிகருமான சி.குமரேசன், திரைக்கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மயங்காதே’.
இத்திரைப்படத்தில் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் கதாநாயகியாக நடித்திருப்பதோடு, சாய்பா விஷன் என்ற நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் தங்களை கதையோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில், கதை சொல்லும் திறன் கொண்டவரான சிகே, இந்தப் படத்திலும் அதே பாணியைப் பின்பற்றி குடும்பத்தோடு ரசித்துப் பார்க்கும் ஒரு கமர்ஷியல் படமாக ‘மயங்காதே’-வை உருவாக்கியிருக்கிறார்.
ஹீரோயிசம், நகைச்சுவை, மாமன், மச்சான் உறவுகளுக்கு இடையிலான அன்பு, பாசம் இவற்றோடு பேயும் நம்மை கலகலப்பூட்டுகிறது.
அப்படின்னா ‘மயங்காதே’ பேய் படமா? என்று உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். பேயும் இருக்கு.. கதையும் இருக்கு.. அப்படி ஒரு அருமையான கலவை..
இந்தப் படத்தின் கதை நடக்கும் சூழலும், இயக்கப்பட்டிருக்கும் விதமும் கோலிவுட் சினிமா சாயலில் தெரிந்தாலும் கூட, மலேசிய மண்வாசனை மாறாமல் கையாளப்பட்டுள்ளது.
அவற்றில் சில சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
நடிப்பு
சிகே – சிக்கென்ற உடற்கட்டோடு, ஸ்டைலான தலைமுடியுடன் ஒரு கதாநாயகனுக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.
கதைப்படி நடக்கும் பாசப் போராட்டங்களின் போதெல்லாம் தனது இயல்பான நடிப்பாலும், முகபாவணைகளாலும் ஈர்க்கிறார். முன்னோட்டத்தில் சிகே பேசும் ஒரு வசனம் வருமே “அவசரப்பட்டு முடிவெடுக்குறவங்களுக்கு மத்தியில நீ மட்டும் என்ன விதிவிலக்கா?” அந்தக் காட்சியில் சிகே, ஷைலா இரண்டு பேரின் நடிப்பிலும் அவ்வளவு உயிரோட்டம். ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சிகே.
அடுத்து படத்தில் நம்மை பெரிதும் கவர்வது ஷைலா நாயர். அவர் அணிந்து வரும் விதவிதமான உடைகள் நிச்சயம் பெண்களைக் கவரும் என்பதோடு நடிப்பிலும் நம்மை ரசிக்க வைக்கின்றார்.
கதைப்படி இரண்டாவது கதாநாயகியாக திவ்யா நாயுடு நடித்திருக்கிறார். இளமையும், அழகும் கொட்டும் அவரது கதாப்பாத்திரம், மலேசிய இளைஞர்களை இருக்கையில் கட்டிப் போடப்போவது நிச்சயம். தொடர்ந்து நல்ல கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தால், மலேசிய இளைஞர்களின் கனவுக் கன்னி ஆகும் வாய்ப்பு காத்திருக்கிறது. கோலிவுட் கொத்திச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
கண்ணன் ராஜமாணிக்கம், ஷ்ருதி ஜெயசங்கர் – அடுத்த தலைமுறை இளம் நட்சத்திரங்கள் தயார். நடிப்பிலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அவ்வளவு அழகு.
அடுத்ததாக, படத்திற்குப் பக்கபலமாக இருப்பவர்கள் கேகே கானா, நகைச்சுவை நடிகர் ஷாம், டிஎச்ஆர் அகிலா, டிஎச்ஆர் சுரேஷ். இந்தக் கூட்டணி படம் முழுவதும் கலகலப்பு சேர்க்கின்றனர். அடுத்து அவர்களது காட்சிகள் எப்போது வரும் என்று எண்ணும் அளவிற்கு ரசிக்க வைக்கும் காமெடி.
இவர்களோடு, குயின், சுஸ்மிதா முருகன், சூரியா ராமையா, ஹேவோக் பிரதர்ஸ், சரண் நாராயணன் ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஆர்த்தி’ கதாப்பாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்திருப்பார். அவரது நடிப்பு மிகவும் அருமை. அவர் யார் என்பது பற்றிய ஒரு ஆச்சர்யத் தகவல் படம் வெளிவந்த பிறகு காத்திருக்கிறது.
இசை நாயகன்
படத்தின் இன்னொரு ஹீரோ இசை தான். பாடல்கள் அனைத்திலும் புதுமையும், புத்துணர்ச்சியும் நிரம்பி வழிகின்றது.
நிரோஷன் இசையில் ‘வானம் பூமி’, ‘ஏண்டி என்னப் பார்க்குற’ என்ற இரண்டு பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் கூட. படத்தில் காட்சிகளினூடே இடம்பெறும் ‘சின்ன ஆசை’, ‘உயிரே’ போன்ற குட்டிப் பாடல்கள் அந்தக் காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் மெல்லிசை.
ஓவியா வரிகளில் ‘வானம் பூமி’ பாடல்வரிகள் துள்ளிக் குதிக்க வைக்கிறது என்றால், பிரபு வரிகளில் ‘ஏண்டி என்னப் பாக்குற’ பாடல், ஹேவோக் பிரதர்சின் ‘இது எங்க ஊரு’ பாடல், இளைஞர்களிடம் பளிச்சென ஒட்டிக் கொள்கின்றது. இவர்களோடு சிறிய பாடல்களுக்கு கோகுலராஜன், நிரோஷனும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
மொத்தத்தில், பாடல்கள் அனைத்தும் புதுமை..
ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவை ஏ.ராம் செய்திருக்கிறார். பொதுவாக மலேசியப் படங்களின் ஒளிப்பதிவு குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி இருந்து வந்தது.
மலேசியப் படங்கள் திரையில் பார்ப்பதற்கு திரைப்படம் மாதிரியான தோற்றம் தரவில்லை என்றும் தொலைக்காட்சிப் படம் பார்ப்பது போல் இருக்கிறது என்றும் கூறி வந்தனர். ஆனால் அந்தக் குறையை மலேசியாவின் சமீபத்திய திரைப்படங்கள் போக்கின. தமிழ்நாட்டுப் படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவை அளிக்கத் தொடங்கினர் மலேசிய ஒளிப்பதிவாளர்கள்.
அந்த வகையில், இந்தப் படத்தில் ஒளிப்பதிவிற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கின்றனர்.
யாருக்கான படம்?
குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் வகையிலான கலகலப்பூட்டும் திரைப்படம். இந்தப் படத்தில் புதுமை என்னவென்றால், கதை நடக்கும் மலேசியச் சூழலும், மண்ணின் மைந்தர்களும் தான்.
ஒரு கோலிவுட் சினிமா பாணியிலான படத்தை அப்படியே மலேசியச் சூழலுக்கு மாற்றியிருக்கிறார் சிகே.
சபா, கோலாலம்பூர், கோலசிலாங்கூர் போன்ற பகுதிகளைச் சுற்றி படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள். திரையில் பார்ப்பதற்கு அந்தக் காட்சிகள் மிகவும் ரம்மியமாக உள்ளன. ரசிகர்களை நிச்சயம் மகிழ்ச்சிபடுத்தும்.
ஆகவே, மலேசிய சினிமா ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த வாரம் ஊடகவியலாளர்களுக்காக ‘மயங்காதே’ சிறப்புக்காட்சி ஒன்று திரையிடப்பட்டது. அதில் நாட்டில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் பங்குபெற்றனர்.
வரும் மார்ச் 15-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், சில விளம்பரப் பணிகளின் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அன்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்