கோலாலம்பூர் – மலேசியா நீதித் துறை வரலாற்றில் இல்லாத நடவடிக்கையாக, மலேசிய வழக்கறிஞர்களின் மன்றம், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலிக்கு எதிராக நீதிமன்றத்தில் சீராய்வு மனு (ஜூடிசியல் ரிவியூ- judicial review) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் நஜிப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தாத காரணத்திற்காக, அபாண்டி அலியின் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கை வழக்கறிஞர்கள் மன்றம் தொடுத்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூன்று விசாரணை அறிக்கைகளை மூடுமாறும், நஜிப் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் அபாண்டி அலி செய்திருந்த முடிவை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் விண்ணப்பத்தைத் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாக வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு (படம்) அறிவித்துள்ளார்.
ஒருவரைக் குற்றம் சாட்டுவதா இல்லையா என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மேற்கொள்ளும் முடிவு மீதான அதிகாரம் இறுதியானதல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட அதிகாரமல்ல என்றும், அதனை எதிர்த்தோ, மறு ஆய்வு செய்யுமாறோ கேட்டுக் கொள்ளும் சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் வழக்கறிஞர்கள் மன்றம் கருதுவதாகவும் ஸ்டீவன் திரு கூறியுள்ளார்.
இந்த சீராய்வு மனுவின் மூலம் நஜிப்புக்கு எதிராக வலுத்து வரும் எதிர்ப்பு அலைகள் மேலும் அதிகரிக்கும் என்றும், நீதிமன்ற வழக்கின் மூலம், நஜிப்பின் ஊழல் விவகாரங்கள் மக்களின் பார்வையில், வெளிச்சத்தில் தொடர்ந்து இருந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் தனது முடிவை நேர்மையாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் செய்ய வேண்டும் என்றும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரங்களையோ, நீதிமன்றத்தின் அதிகாரங்களையோ தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர் முடிவெடுக்க முடியாது என்றும் ஸ்டீவன் திரு மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் மீதான விசாரணைகளைத் தொடர வேண்டும் என்றும் தங்களின் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.