Home Featured தமிழ் நாடு மோசடி வழக்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் கைது!

மோசடி வழக்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் கைது!

502
0
SHARE
Ad

Minister+shunmuganathan-PAசென்னை – தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர்  எம். கிருஷ்ணமூர்த்தி (56) தூத்துக்குடியில் புதன்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் தெற்கு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சிச் செயலரான கிருபானந்த முருகன் (36), தனது மனைவி தாஜுநிஷா அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த பணியை வாங்கித் தருமாறும் கேட்டாராம்.

இதையடுத்து கிருபானந்த முருகனிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 3 லட்சம் ரொக்கத்தை கிருஷ்ணமூர்த்தி பெற்றாராம். இருப்பினும், வேலை  கிடைக்காததால் பணத்தை திரும்பத் தருமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் கிருபானந்த முருகன் கேட்டாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி அளித்த புகார் மனுவில், அரசு வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் பெற்ற ரூ. 3 லட்சத்தை திரும்பத் தராமல் கிருஷ்ண மூர்த்தி மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை கேட்கும் போது தகாத வார்த்தைகளை பேசியதோடு, ஜாதி பெயரைச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட அதிமுக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை மத்தியபாகம் போலீஸார் புதன்கிழமை பிற்பகல் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, புகார் அளித்த கிருபானந்த முருகனும் காவல் நிலையத்தில் இருந்தார். அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், பணம் மோசடி செய்தது, தகாத வார்த்தைகளில் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது ஆகிய நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கிருபானந்த முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிருஷ்ணமூர்த்தி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தூத்துக்குடி மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்குப் பிறகு இரவு 7 மணியளவில் தூத்துக்குடி இரண்டாவது நீதித் துறை நடுவர் பொறுப்பு வகிக்கும் கலையரசி வீட்டில்  கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர், கிருஷ்ணமூர்த்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.