கொல்கத்தா – கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் எந்த அனைத்துலகப் போட்டிகள் நடந்தாலும், அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் எந்தக் கட்டத்தில் மோதினாலும், அந்த ஆட்டம்தான் இறுதிச் சுற்று போல உலகம் எங்கும் உற்று கவனிக்கப்படும்.
நேற்றும் அப்படித்தான் நடந்தது. அதிலும் நியூசிலாந்துடனான முதல் ஆட்டத்தில் சொதப்பி, மிக மோசமாகத் தோல்வியடைந்த இந்தியா, நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றாக வேண்டும் – அப்போதுதான் அடுத்த கட்டம் செல்ல முடியும் என்ற நிலைமை வேறு. காரணம், பாகிஸ்தான் அணியினர் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வெற்றி கொண்டிருந்தனர்.
கொல்கத்தாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையின் காரணமாக, ரத்து செய்யப்படலாம் என்ற நிலைமை முதலில் இருந்தது. ஆனால் பின்னர், தாமதமாக ஆட்டம் தொடங்கிய காரணத்தால் மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 18ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் பாதி ஆட்டத்தில் 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 118 ஓட்டங்களைக் குவித்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி ஆரம்ப கட்டங்களில் வரிசையாக சில விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தில் பின்னடைவு காணத் தொடங்கியது.
ஆனால், வீராட் கோலி மட்டையைத் தூக்கிப் பிடித்ததும், நிலைமை மாறத் தொடங்கியது. ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து விளையாடிய கோலி, 37 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்வு பெற்றார்.
4 விக்கெட்டுகளை மட்டுமே இந்தியா இழந்தது. இதனைத் தொடர்ந்து 6 விக்கெட்டுகளில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.