கோலாலம்பூர் – காலை உணவு.. மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் உழைக்கப் போகும் உடலுக்கு புத்துணர்ச்சியும், வேகமும் தரும் வகையில் ருசியான ஆரோக்கியமான காலை உணவு அமைந்துவிட்டால், அன்றைய நாளில் உற்சாகத்திற்கு குறைவே இருக்காது.
மலேசியர்களில் பெரும்பாலானவர்களிடம் காலை உணவு என்னவென்று கேட்டால் சட்டென யோசிக்காமல் ‘நாசி லெமாக்’ என்பார்கள். காரணம், தேங்காய் பால், இஞ்சி, பாண்டான் சேர்ந்த கலவையில் வெந்த சோறுடன், காரசாரமான சம்பல், பொறித்த கடலை மற்றும் நெத்திலி அதன் ருசியே தனி தான்.
“ஐயயோ.. காலையிலேயே அவ்வளவு கொழுப்பு நிறைந்த உணவா எடுத்துக்கிறீங்க?” என்று கேட்டு சிலர் அடிவயிற்றில் பீதியை கிளப்புவார்கள்.
ஆனால், காலை நேரத்தில் ‘நாசி லெமாக்’ மிக ஆரோக்கியமான உணவு தான் என்று அனைத்துலக உணவுப்பட்டியலில் இடம் பிடித்துவிட்டது. இந்த அங்கீகாரத்தை அளித்திருப்பது வேறு யாருமல்ல. அமெரிக்காவின் புகழ்பெற்ற வார இதழான டைம், உலகின் மிக ஆரோக்கியமான 10 காலை உணவுகள் பட்டியலில் நாசி லெமாவையும் சேர்த்துள்ளது.
“ஆமாம்.. அது கொஞ்சம் கொழுப்பு நிறைந்த உணவு தான். ஆனால் மாங்கனீஸ், புரதம், மாவுச்சத்து என அனைத்தும் கலந்த கலவையாக உடலுக்கு நன்மை தரும் அம்சங்கள் நிறைய உள்ளன. அதிலும், சம்பல் இருக்கிறதே அது மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது” என்கிறது டைம்.
என்றாலும், ஒரு அடிப்படை விசயம் காலங்காலமாக நமக்கு போதிக்கப்பட்டு வருகின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் அளவோடு சாப்பிட்டு அதற்கேற்ப உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால் எந்த வயதிலும் எதையும் யோசிக்காமல் ருசிக்கலாம்.
தொகுப்பு: செல்லியல்
தகவல்: ஸ்டார் இணையதளம்