Home Featured நாடு தைப்பிங்கில் டாக்டர் சுப்ராவின் பங்குனி உத்திர உபயம்: 70 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாகத் தொடரும் பாரம்பரியம்!

தைப்பிங்கில் டாக்டர் சுப்ராவின் பங்குனி உத்திர உபயம்: 70 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாகத் தொடரும் பாரம்பரியம்!

1226
0
SHARE
Ad

தைப்பிங் – நாளை கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா முருகக் கடவுளுக்கான சிறப்புத் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் பூஜைகள், உபயங்கள், அன்னதானங்கள், காவடி வேண்டுதல்கள் என முருகக் கடவுளுக்கே உரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த பங்குனி உத்திரத் திருவிழா தைப்பிங்கிலுள்ள, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

Subramaniam-photoஅந்த ஆலயத்தில் இன்று நடைபெறும் சிறப்பு பங்குனி உத்திர உபயத்தில் சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கின்றார். ஆனால், அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு வழக்கமான அரசியல், சமுதாய நிகழ்ச்சியோ அல்ல! அல்லது பக்தியை மட்டும் காட்டும் சமய நிகழ்ச்சியுமல்ல!

மாறாக, அந்த உபயத்தை நடத்துவதே டாக்டர் சுப்ராவின் குடும்பம்தான் என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சம்!

#TamilSchoolmychoice

அதுமட்டுமல்ல! அந்த உபயத்தை இன்றும் தொடர்ந்து தைப்பிங் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடத்துவதன் மூலம், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக 3 தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாரம்பரிய பெருமையைத்தான் டாக்டர் சுப்ரா அந்தக் குடும்பத்தின் தலைமகன் என்ற முறையில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

தைப்பிங்கில் தொடங்கிய குடும்ப வரலாறு

சுப்ராவின் தாத்தாவான கே.வேலுசாமி சேர்வை 1906ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்திலிருந்து வந்து தைப்பிங்கில்தான் முதன் முதலாகக் குடியேறினார். அப்போது, தைப்பிங் நகரம் சுரங்கத் தொழிலில் செல்வம் கொழிக்கும் – முன்னணி வகிக்கும் – வட்டாரமாகவும், மற்ற சில சரித்திர நிகழ்வுகளின் பிறப்பிடமாகவும் திகழ்ந்தது.

இங்குதான் ஆரம்ப காலத்தில் மலேசியாவின் முதல் வங்கிகள் செயல்பட்டிருக்கின்றன. மலேசியாவின் முதல் இரயில் பாதையும் இங்குதான் அமைக்கப்பட்டது. மலேசியாவின் முதல் மருத்துவமனையும் இங்குதான் தொடங்கப்பட்டதாக கடந்தகால சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

டாக்டர் சுப்ராவின் தந்தை வழித் தாத்தாவான வேலுசாமி இங்குள்ள இந்து தேவாலய சபாவின் அறங்காவலர்களில் ஒருவராக சேவையாற்றியிருக்கின்றார். தனது கடுமையான உழைப்பின் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த வேலுசாமி அவர்கள், பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் நலனுக்காக, பல்வேறு வகைகளிலும் சேவைகளையும், நன்கொடைகளும் வழங்கியிருக்கின்றார்.

Dr-S-Subramaniamஅவரது துணைவியாரும், டாக்டர் சுப்ராவின் பாட்டியுமான நல்லம்மாள்  அம்மையார் மஇகாவின் ஆரம்ப காலங்களில் அதன் மகளிர் பிரிவில் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

இத்தகைய சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட வேலுசாமி குடும்பத்தினர்தான் முதன் முதலாக தைப்பிங் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர உபயத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தனர். அவருக்குப் பின்னர் வேலுசாமியின் மகன் கே.வி.சதாசிவம் (டாக்டர் சுப்ராவின் தந்தையார்) அந்த உபயத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்.

இப்போதும், தனது குடும்பத்தினரின் 70 ஆண்டுகால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட இந்த பங்குனி உத்திர உபயத்தை டாக்டர் சுப்ரா தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்.

எங்கிருந்த போதும், பங்குனி உத்திரம் மட்டும் தைப்பிங்கில்!

தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை பினாங்கில் முடித்துவிட்டு, மருத்துவப் படிப்பை, சிங்கப்பூரில் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்துவிட்டு, பின்னர் மலேசியாவின் பல்வேறு நகர்களில் அரசாங்க மருத்துவ சேவையில் பணியாற்றி விட்டு, மலாக்காவில் தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பணியாற்றியபோதும் –

இன்று புத்ராஜெயாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் காலகட்டத்திலும், ஆண்டுதோறும் தைப்பிங் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் பங்குனி உத்திர உபயத்தை ஏற்று நடத்தும் பாரம்பரியத்தை டாக்டர் சுப்ரா கைவிட்டு விடாமல், தனது முன்னோர்கள் தொடக்கி வைத்த – தொடர்ந்து கொண்டிருந்த பெருமையை மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் வண்ணம் இன்றும் அந்த உபயத்தை தனது குடும்பத்தினருடன் நடத்தி வருகின்றார்.

மலேசியாவின் இந்துக் குடும்பங்களில் காலங் காலமாக இணை பிரியாமல், இழையோடிக் கொண்டிருக்கும் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை, இன்றைய தலைமுறைக் குடும்பங்களில் பல தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன என்பதற்கான மற்றொரு உதாரணமாகத் திகழ்கின்றது, தைப்பிங் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் டாக்டர் சுப்ரா ஆண்டுதோறும் நடத்தி வரும் பங்குனி உத்திர உபயம்!