புதுடில்லி – பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்சில் இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் 30ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசல்ஸ் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறும் 13வது உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள பிரசல்ஸ் செல்லும் மோடியின் திட்டத்தில் எவ்வித மாற்றமுமில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மார்ச் 30ஆம் தேதி திட்டமிட்டபடி மோடி பிரசல்ஸ் சென்றடைவார் என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
இன்று பிரசல்ஸ்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 126 பேர் மரணமடைந்துள்ளதோடு, 130 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 என இருநாட்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நடத்தும் அணு பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லவிருக்கும் மோடி, போகும் வழியில் அதற்கு முன்பாக பிரசல்ஸ் நகருக்கு மார்ச் 30இல் வருகை தருவார்.
அமெரிக்க வருகையை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சவுதி அரேபியா அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரியாத் நகரில் மோடி தங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.