புதுடெல்லி – பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலைய இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், பெல்ஜியம் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி டுவிட்டரில், பிரசல்ஸ்ஸில் இருந்து வரும் செய்திகள் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் பலியானோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் இந்திய தூதரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை, அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
மேலும், விவரங்கள் அறிய இந்திய தூதரகத்தின் உதவி எண்கள் +32-26409140, +32-26451850 (PABX) & +32-476748575 (செல்பேசி) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி பெல்ஜியம் செல்ல உள்ளார். திட்டமிட்டபடி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாநாட்டில் திட்டமிட்டபடி அவர் கலந்து கொள்ளவார் என விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.