Home Slider மக்கள் கூட்டணியின் பலத்தைக் காட்டிய மாபெரும் ஹிம்புனான் பேரணி

மக்கள் கூட்டணியின் பலத்தைக் காட்டிய மாபெரும் ஹிம்புனான் பேரணி

765
0
SHARE
Ad

Feature-Himpunan-crowdகோலாலம்பூர், ஜனவரி 13 – எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் அரசு சார்பற்ற இயக்கங்களும் ஒன்று திரண்டு நேற்று கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கத்தில் நடத்திய மாபெரும் பேரணி எந்தவித அரசம்பாவிதமும் இன்றி நடந்தேறியுள்ளதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மக்கள் ஆதரவும், பலமும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளாகக் கலந்து கொண்டதோடு, பேரணி நடந்த மெர்டேக்கா அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர் என பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த பேரணியில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனதுரையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றினால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதைப் பட்டியலிட்டு முழங்கினார்.

#TamilSchoolmychoice

பாக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிடிபிடிஎன் கல்விக் கடன்கள் அகற்றப்படும் என்ற உறுதியையும் அன்வார் இப்ராகிம் வழங்கினார்.

அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த இந்த பேரணிதான் பொதுத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் இறுதிப் பேரணி என்பதால் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உற்சாகமுடன் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியின் இறுதியில் அன்வார் இப்ராகிம், சரித்திரப் பிரசித்தி பெற்ற நாட்டின் சுதந்திரத்தை நினைவுபடுத்தும் வண்ணம் ‘மெர்டேக்கா’ என ஏழு முறை முழங்கினார். 1957ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் பெற்றபோது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஏழு முறை மெர்டேக்கா என முழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணியை எந்தவித அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தியதன் வழி எதிர்க்கட்சி கூட்டணியான பாக்காத்தான் ராயாட் மீதிலான மக்களின் நம்பிக்கையும் அபிமானமும் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.