கோலாலம்பூர்: நியூசிலாந்து பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களை நினைவுக் கூரும் வகையில், அமைதிக் கூட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
வெள்ளை நிற ஆடை அணிந்து அவர்கள், சோகோ விற்பனை மையத்திலிருந்து டாதாரான் மெர்டேகாவிற்கு நடந்து சென்றனர்.
காலை 6.45 மணி முதலே மக்கள் கூட ஆரம்பித்துவிட்டதாக மலேசியாகினி செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது.
ஒரு சிலர், வன்முறை மற்றும் வெறுப்புணர்வு வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும், அட்டைகளையும் ஏந்திச் சென்றனர்.
வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி துணை அமைச்சர் ராஜா காமாருல் பாஹ்ரின் ஷா ராஜா அகமட், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின், துருக்கி நாட்டு தூதர் மெர்வே கவாக்கி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மதத் தலைவர்களும், அரசு சார நிறுவனங்களும் இந்த அமைதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், பிதரமர் துறை அமைச்சர்களான பொன். வேதமூர்த்தி, முஜாஹிட் யூசோப் ரவா மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் ஆகியோரும் இந்த அமைதிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த அமைதிக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நியூசிலாந்து தூதர் ஹண்டர் ஹொட்டேஜ், கிரிஸ்ட்சர்சில் நடந்த துயர சமபவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.