
வெல்லிங்க்டன் : நியூசிலாந்து நாட்டை ஒரு பெண் பிரதமராக சிறப்பாக வழிநடத்தி உலகம் முழுவதிலும் பிரபலமான ஜெசிந்தா ஆடர்ன் பதவியிலிருந்து விலகும் அதிர்ச்சி அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தான் பதவி விலகவிருப்பதாகவும் மீண்டும் தேர்தலுக்கு நிற்கும் முடிவை எடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பிரதமராகப் பதவி வகித்த ஐந்தரை ஆண்டுகள் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் கூறிய 42 வயதான ஆடர்ன் தானும் மனிதப்பிறவிதான் என்றும் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் தருணம் வந்து விட்டது என்றும் கலங்கிய கண்களுடன் அறிவித்தார்.
நியூசிலாந்தை ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவரை – பிரதமரை – தேர்ந்தெடுக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்சி கூடும். புதிய தலைவர் பிரதமரானதும் அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் நியூசிலாந்தின் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.