பெங்களூர் – உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, சிறப்பான ஆட்டத்தால் ரன் வேகமாக உயர்ந்தது. கடைசி ஒவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஹிம் 2 மற்றும் 3 பந்துகளை பவுன்டரிக்கு விரட்டினார்.
இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 4 மற்றும் 5-வது பந்துகளை சிறப்பாக வீசிய பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்க்க, கடைசி பந்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 2 ரன்களே தேவைப்பட்டது.
கடைசி பந்தை பவுன்சாராக பாண்டியா வீச, ரன் ஒட முயன்ற வங்கதேச வீரரை, தோனி சிறப்பாக செயல்பட்டு ரன் அவுட் செய்தார். இதனால் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.