கொல்கத்தா – நேற்றிரவு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளும் மோதின.
இதன் முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது, 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 156 ஓட்டங்கள் என்ற என்ற இலக்கைக் கொண்டு களமிறங்கி விளையாடியது.
இந்த இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 19.4 ஓவர்கள் நிறைவடைந்தபோது, அதாவது 2 பந்துகளே எஞ்சியிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி ஒரே ஓவர் இருக்கும்போது 19 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற சிரமமான சூழலில் ஆட்டத்தைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வரிசையாக மூன்று சிக்சர் அடித்து 18 ஒட்டங்களைக் குவித்தது. இதனை அடுத்து எஞ்சியிருப்பது 3 பந்துகள் எடுக்கவேண்டியது ஒரே ஒரு ஓட்டம் என்ற வெற்றி விளிம்புக்கு வெஸ்ட் இண்டீஸ் சில நிமிடங்களிலேயே நெருங்கி வந்தது. அடுத்த பந்தும் சிக்சராக – அப்புறம் என்ன வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெற்றிக் கொண்டாட்டம்தான்!
இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி கொண்டு உலகக் கிண்ணத்தைப் பெற்றது.
பெண்கள் பிரிவிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இதற்கிடையில் நேற்று மாலையில் முதலில் நடைபெற்ற, கிரிக்கெட் டி 20 பெண்கள் பிரிவுக்கான உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியடையும் விதத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், தொடர்ந்து நான்கு தவணைகளாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.
பெண்கள் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் 20 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை எடுத்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 19.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெண்கள் பிரிவுக்கான கிரிக்கெட் டி20 உலகக் கிண்ண வெற்றியாளர் கிண்ணத்தைப் பெற்றது.
ஆண்கள் – பெண்கள் என இரு பிரிவிலும் உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றிருக்கின்றது.