கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நஜிப்புக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில், தாக்கல் செய்த 37 பக்க அறிக்கையில், தன் மீதான காவல்துறை விசாரணைகள் மற்றும் பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவி பறிப்பு உள்ளிட்டவைகளை நஜிப்பின் அத்துமீறல்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நஜிப்புக்கு அளித்து வந்த ஆதரவில் இருந்து பின்வாங்குவதாக தான் பொதுவில் அறிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள மகாதீர், பிரதமரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பெர்சே 4 பேரணியிலேயே விமர்சித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பெர்சே 4 பேரணியில் பேசிய கருத்துகளுக்காக கடந்த நவம்பர் 6-ம் தேதி, காவல்துறையால் தான் விசாரணை செய்யப்பட்டதாகவும் மகாதீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, தனது வலைத்தளத்தில் (www.chedet.cc) 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் செய்த முறைகேடு, தலைமை வழக்கறிஞர் பதவியிலிருந்து அப்துல் கனி பட்டேலை நீக்கியது உள்ளிட்டவைகள் குறித்தும் எழுதி வந்ததாக மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் வெளியிட்ட கருத்து ஒன்றில், அப்துல் கனி பட்டேலுக்குப் பதிலாக தலைமை வழக்கறிஞராகப் பதவி ஏற்ற அபாண்டி அலி, நஜிப் குற்றமற்றவர் என்று அறிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என்று தெரிவித்திருந்ததாகவும், அதன் காரணமாக மீண்டும் ஒருமுறை காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து தான் கடந்த மார்ச் 11-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ள மகாதீர், இவையெல்லாம் நஜிப் செய்த அத்துமீறல்கள் என்றும் அதில் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.