கோலாலம்பூர், மார்ச் 15 – கடந்த சில வாரங்களாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு அரசு வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் செலவழிக்கப்பட்ட விதம் பற்றிய சந்தேகக் கேள்விகளும், பதில்களும் முரளி மற்றும் தமிழ் பேரவைக்கிடையே தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மீண்டும் பூச்சோங் முரளியும், மக்கள் சக்தி வடிவேலனும் அந்த நிதி என்னவானது என்பது பற்றி எஸ் எஸ் எம் என்ற நிறுவனங்களில் பதிவக ஆணையம் விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேரவை பொருளாளர் கந்தையாவும், உறுப்பினர்களும் அந்த பணத்திற்கான செலவுக் கணக்கையும், கையிருப்பு பற்றியும் விளக்கம் அளித்ததோடு, தங்கள் மேல் வீண் பழி சுமத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
வழங்கப்பட்ட உதவி பகிரங்கமாக அறிவிக்கப்படாதது ஏன்?
இதற்கிடையே அந்த நிதியைப்பற்றி விசாரிக்கக் கோரி மலேசிய நிறுவன பதிவக ஆணையத்திடம் அறிக்கையை சமர்ப்பித்த முரளியும், வடிவேலனும், பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், கடந்த 30.6.2012ல் ஆங்கில நாளேடு ஒன்றில் 1700 பேர் நிதியைப்பெற உரிமையுள்ளவர்களாக அடையாளங் காணப்பட்டு, மறைமுகமாக உதவியும் வழங்கப்பட்டுவிட்டதாக ஐங்கரன் தலைமையிலான பேரவையினர் தெரிவித்துள்ளதாகவும், அப்படி மறைமுகமாக உதவ வேண்டிய கட்டாயம் என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உதவி செய்த நாடுகள் தங்கள் பெயரை அறிவிக்கும் சுவரொட்டிகளையே வைக்க ஐ.நா. சபை அனுமதி தந்துள்ளபோது, பகிரங்கமாக அரசிடம் வாங்கிய பணத்தை மறைமுகமாக வழங்கியதாக தெரிவித்திருப்பது ஏன் என்றும்,அதற்கான விளக்கத்தையும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் தமிழ்பேரவை உறுப்பினர் ஆறுமுகம், வழங்கப்பட்ட நிதிக்கு கணக்கறிக்கையை எஸ் எஸ் எம்மில் சமர்ப்பித்துவிட்டதாக அறிவித்திருந்த போதும், தாங்கள் விசாரித்த வகையில் அக்கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் 32 லட்சம் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.