Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்!

திரைவிமர்சனம்: தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்!

1171
0
SHARE
Ad

thozha-759கோலாலம்பூர் – நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு நட்பின் ஆழத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படம் பார்த்து..

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கார்த்திக், நாகர்ஜூனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது தோழா..

பணம் சம்பாதித்தால் சந்தோஷம் தானாக வந்துவிடும் என்று நினைக்கும் சீனுவும் (கார்த்தி), பணம் இருந்தும் சந்தோஷம் இன்றித் தவிக்கும் விக்ரமும் (நாகர்ஜூனா) கால ஓட்டத்தில் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய நிர்பந்தம்.

#TamilSchoolmychoice

இருவரும் சந்திக்கிறார்கள்.. கள்ளம் கபடமில்லாத சீனுவின் அன்பால் மகிழ்ச்சியைப் பெறுகிறார் முதலாளியான விக்ரம், அதற்குக் கைமாறாக தனது பணியாளன் சீனுவின் குடும்பப் பிரச்சனைகளை கண்ணசைவில் தீர்த்து அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பார்க்கிறார்.

ஆம்.. விக்ரமால் கை காலை அசைக்க முடியாது. ஒரு விபத்தில் கழுத்துக்குக் கீழ் செயலிழந்துவிடுகிறது. தன்னை கவனித்துக் கொள்ளவே சீனுவை பணியாளராக அமர்த்துகிறார் அந்தப் பணக்காரர்.

இப்படியாக, ஒரு முதலாளி, பணியாளனாக ஆரம்பிக்கும் உறவு, அப்படியே நட்பாக மாறி, அவரவர் துன்பங்களுக்குத் தோள் கொடுக்கிறது.

அற்புதமான கதைக்கரு.. 2011 -ம் ஆண்டு வெளிவந்த ‘The Intouchables’ என்ற பிரஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பு (ரீமேக்) தான் தோழா.

நடிப்பு

அபியும் நானும் .. படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் ரவிசாஸ்திரி கதாப்பாத்திரத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஒரு ஹீரோ அந்தஸ்து கொடுத்து அதனை முன்னிலைப் படுத்தி ஒரு படம் எடுத்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் தோழா படத்தில் கார்த்திக்கு.

பேசும் மெட்ராஸ் பாஷை முதல் முகத்தில் காட்டும் குறும்புத்தனங்கள் வரை அப்படியே பல இடங்களில் ரவி சாஸ்திரி கதாப்பாத்திரத்தின் சாயலைப் பார்க்க முடிந்தது.

என்றாலும், நடிகர் கார்த்திக்கென்று ஒரு தனித்திறமை உண்டு. இது போன்ற கதாப்பாத்திரங்களை சர்வ சாதாரணமாகக் கையாண்டு மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்தப் படத்திலும் சீனு கதாப்பாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் படியாக அவரது நடிப்பு அற்புதம்.

“சார்.. நீங்க ரொம்ப எமோஷனலான ஆளு சார்” என்று பிரகாஷ்ராஜிடம் பெயிண்டிங் குறித்த உண்மையைச் சொல்லும் இடங்களிலெல்லாம் நடிப்பில் கார்த்திக்கு இணை கார்த்தி தான்..

Thozha01நாகர்ஜூனா.. இந்தக் கதாப்பாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் இன்னொரு நடிகரால் செய்திருக்க முடியுமா? என்று இப்போது சந்தேகம் வருகின்றது. கழுத்துக்கு கீழ் எங்கும் அசைக்க முடியாது ஆனால் சந்தோஷம், சோகம், நட்பு, காதல், கோபம் என அத்தனை உணர்வுகளையும் படம் முழுவதும் முகத்தில் காட்டியே நடித்துப் பெயர் வாங்க வேண்டும். அப்படி ஒரு பொறுப்பை மிகச் சிறப்பாக ஏற்றுள்ளார்.

அடுத்ததாக நடிகை தமன்னா.. நடிப்பு + கவர்ச்சி இந்த இரண்டிற்கும் தீனி போடும் படியான அழகிய கதாப்பாத்திரம். அவரின் உடுத்தி வரும் நாகரீக உடைகளும், பணக்கார பெண்ணுக்கே உரிய தோரணையும் தான் கவர்ச்சியாகத் தெரிகின்றது. மற்றபடி படம் முழுவதும் நட்பு, அன்பு, காதல் இம்மூன்றையுமே முன்னிறுத்துகின்றது.

Karthi-Tamanna-Thozha-Movie-Stills-5இவர்களோடு நண்பராக பிரகாஷ்ராஜ், கார்த்தியின் அம்மாவாக ஜெயசுதா, வழக்கறிஞராக விவேக் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வண்ணத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது.

வசனம்

home-index-image-thozha-11ஒரு படம் ரீமேக் செய்யப்படும் போது அந்தந்தக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அதன் முந்தைய நடிகர்களை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, ஒரு வேற்றுமொழிப்படத்தின் மறுபதிப்பு என்பதை மறந்து தமிழ்ப் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை  ரசிகர்களுக்கு ஏற்படுத்த புதிதாகச் சேர்க்கப்படும் வசனங்கள் தான் மிகவும் கைகொடுக்கும்.

அந்த வகையில், இந்தப் படத்தில் இடம்பெறும் வசனங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

“சீனு..இந்த உலகத்திலே பணம் இருந்தா ஒருத்தன் சந்தோஷமா இருப்பான்னா.. என்னை விட ஒருத்தன் சந்தோஷமா இருக்க முடியாது”

“பயம் இருந்தா காதலும் இருக்கும்.. நாம நேசிக்குறவங்க நம்மளவிட்டு போயிடக்கூடாது என்று நினைக்கிறோம் பாரு அது தான் பயம்”

“பூ அனுப்புனா எப்படி சார் பொண்ணு வரும்?”, “நான் அனுப்புனது பூ இல்ல கியூரியாசிட்டி”

இப்படியாக மனதைத் தொடும் பல வசனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒளிப்பதிவு, இசை

விநோத் ஒளிப்பதிவில் ஜொலிக்கும் பணக்கார வீடும், நடுத்தரவர்க்கத்தின் அழுக்கான குடியிருப்பும் அசத்தல் அழகு. இரண்டிற்குமான வித்தியாசத்தை அவ்வளவு அழகான வண்ண வேறுபாடுகளுடன் காட்டியிருக்கிறார்.

அதே நேரத்தில், பாரீஸ் நகரத்தில் அழகையும், பிரம்மாண்டத்தையும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அங்கு நடக்கும் அந்த கார் சேஸிங் காட்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்.

thozha-photos-images-41044கோபி சுந்தரின் பின்னணி இசையும், பாடல்களும் நெகிழ வைக்கின்றது. மதன் கார்க்கி வரிகளில் பாடல்வரிகள் அனைத்தும் புத்துணர்ச்சியளிக்கின்றன.

மொத்தத்தில், தோழா – வாழ்க்கையில் இப்படி ஒரு நண்பன் வேண்டும்! வானமாய் மனமும், பூமியாய் தாங்கும் குணமும்!

-ஃபீனிக்ஸ்தாசன்