கொச்சின் – புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மலையாள நடிகர் ஜிஷ்னு ராகவன் இன்று காலை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும், தனது ரசிகர்களையும் சந்தோசமாக வைத்திருந்த ஜிஸ்னு ராகவன் கடந்த மகளிர் தினத்தன்று, உங்களுக்காக உழைக்கும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
மார்ச் 8-அம் தேதி மருத்துவமனையில் இருந்துகொண்டே ஒரு காணொளி பதிவைப் ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். அதுவே அவருடைய கடைசிப் பதிவாகிவிட்டது. அந்த பதிவில் அவர் கூறியதாவது; எப்போதும் நம்பிக்கையோடும், சிரிப்போடும் இருப்பது நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
நான் இப்போது ஐ.சி.யுவில் இருக்கிறேன். வருத்தமடைய ஒன்றுமில்லை. இது எனது இன்னொரு வீடுதான். எனக்கு இங்கேயும் சந்தோஷம் இருக்கிறது. மருத்துவர் வருகையில் நான் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தவுடன் என்னைப் பார்க்க வந்த மருத்துவரிடம் ஒரு சிரிப்பு சிரித்தேன்.
நான் இப்படி சிரிப்பதால் அவரும் அதே போன்ற புன்னகையை உதிர்ப்பார். இப்படி சிரித்துக்கொண்டே இருக்கும் நோயாளியைப் பார்ப்பது சிறந்த விஷயம். இது எங்களுக்கும் உற்சாகமாக சிகிச்சை கொடுக்க உதவுகிறது. நான் நிறைய சிரிப்பேன். எந்த நிலையிலும் நான் சிரிப்பேன்.
நம்புங்கள் கண்டிப்பாக இது மிகப்பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். அவர்கள் மிகவும் கடினமான, வலி நிறைந்த வேலையைச் செய்கிறார்கள். அதிலும் ஐ.சி.யு என்றால் சொல்லவா வேண்டும்? ஆனால் எப்போதும் சிரித்தபடி இருந்தால் நாம் இருக்கும் சூழலை கண்டிப்பாக நல்லமுறையில் வைத்திருக்கும்.
சிரிப்பு ஒரு மாயாஜாலம், முயற்சி செய்து பாருங்கள். எல்லாருக்கும் தெரியும் எனினும் நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோம். இது மிகப்பெரிய அறிவுரைதான் எனினும் எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜிஷ்னு ராகவன்.