திருவனந்தபுரம் – கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சினுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவை, கும்பல் ஒன்று வழிமறித்து காருக்குள் ஏறியது.
ஓடும் காரில் வைத்து பாவனாவை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அக்கும்பல், பின்னர் அவரை பாலாரிவட்டம் என்ற இடத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டது.
இந்நிலையில், காவல்துறையில் பாவனா அளித்த புகாரின் பேரில், அவரின் முன்னாள் கார் ஓட்டுநர் உட்பட மூவரை கோயம்பத்தூரில் வைத்து காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
அரை நிர்வாணப் படங்கள்:
காரில் பாவனாவைப் பாலியல் துன்புறுத்தல் செய்த போது, அதனைக் காணொளியாகப் பதிவு செய்த அக்கும்பல், பின்னர் அதனைக் காட்டி பணம் பறிக்கத் திட்டம் போட்டிருந்தது விசாரணை தெரிய வந்திருக்கிறது. பாவனா பயந்துவிடுவார், இச்சம்பவத்தை வெளியே சொல்ல மாட்டார் என தாங்கள் நினைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
மலையாள திரையுலகம் கண்டனம்:
இந்நிலையில், பாவனாவுக்கு நேர்ந்த இச்சம்பவத்தைக் கண்டித்து, நேற்று எர்ணாகுளத்தில், நடிகர் மம்முட்டி தலைமையில் ஒன்று கூடிய மலையாளத் திரையுலகம், குற்றவாளிகளைக் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காத படி காவல்துறை, கேரளா முழுவதும் தக்க பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நடிகைகளுக்கு இனி பாதுகாவலர்கள்:
நடிகை பாவனாவுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கருத்துக் கூறியிருக்கும் நடிகைகள், மிகவும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
தனியார் பாதுகாப்பு மையங்களை நாடி, தங்களுக்கென பாதுகாவலர்களை நியமனம் செய்து கொள்ளவும் அவர்கள் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.