புத்ராஜெயா – மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டியதை அடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பிய விஸ்மா புத்ரா, வடகொரியாவிற்கான மலேசியத் தூதரை மீட்டுக் கொள்வதாக அறிவித்தது.
இது குறித்து இன்று திங்கட்கிழமை கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை விடுத்த விஸ்மா புத்ரா, வடகொரிய தூதர் காங் சோலின் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள், மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக வடகொரிய தூதர் காங் விடுத்த அறிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் விஸ்மா புத்ரா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அதோடு, மலேசிய வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் கருத்தில், வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் மரணத்தில், மலேசியா மிகவும் வெளிப்படையான தன்மையிலேயே விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மலேசியாவுக்கான வடகொரிய தூதர் காங் சோல், கிம் ஜோங் நம் உடலைத் தராமல் மலேசியா வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.