புத்ரா ஜெயா – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பின் பிரதமராகப் பதவியேற்ற துன் அப்துல்லா படாவி பெட்ரோனாசின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெட்ரோனாஸ் ஆலோசகராக படாவி (படம்) நியமிக்கப்பட அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதில் புதைந்திருக்கும் பின்னணி அரசியல் யாரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். காரணம், மகாதீருக்கு வெறுப்பேற்றும் முடிவு இது என்பது நஜிப்புக்கு நன்றாகவே தெரியும்.
மகாதீருக்குப் பின்னர் படாவி பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர், 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றாலும், அடுத்த 2008 பொதுத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை அவரது தலைமையின்கீழ் தேசிய முன்னணி தழுவியது.
அதைத் தொடர்ந்து படாவி பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கிய மகாதீர் அந்தப் போராட்டத்தில் அம்னோவிலிருந்தே விலகினார். படாவிக்குப் பதிலாக நஜிப் பிரதமராக வரவேண்டும் என அறைகூவல் விடுத்தவரே இதே மகாதீர்தான்!
படாவிக்கு எதிராக அம்னோவிலிருந்து விலகிய மகாதீர், பின்னர் படாவி அம்னோ தலைவராகப் பதவி விலகிய நாளில் – அம்னோ பேரவையில் படாவியை வெறுப்பேற்றும் வண்ணம் மண்டபத்தில் நுழைந்தார். அதன் காரணமாக, படாவியை பதவியிலிருந்து வீழ்த்திய வெற்றி நாயகராக மகாதீர் பார்க்கப்பட்டார்.
படாவி அம்னோ தலைவராகப் பதவி விலகிச் செல்லும் பிரியாவிடை வைபவம் கூட அன்று களையிழந்தது – மீண்டும் அம்னோவுக்குள் மகாதீர் காலடி எடுத்து வைத்ததை உணர்த்துவதுபோல் மண்டபத்திற்குள் அவர் நுழைந்த காரணத்தால்!
ஆனால், இன்று பெட்ரோனாஸ் பதவியிலிருந்து அதே மகாதீர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக படாவி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், மகாதீரோ நஜிப் பதவி விலக வேண்டும் என மீண்டும் அம்னோவிலிருந்து பதவி விலகி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
இதுதான் அரசியலில் காலத்தின் கோலம் என்பதா?