புதுடில்லி – தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் அதற்கு முன்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்தக் கூடாது எனக் கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மனுவை மூத்த வழக்கறிஞர் பரமாந்த கட்டாரியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது தவறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே மேல் நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில், சிறப்பு நீதிமன்றத்தில்தான், தீர்ப்பை திருத்தக் கோரி ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கட்டாரியா தனது மனுவில் கூறியுள்ளார்.
எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முறையானது அல்ல என்றும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மனுவின் மூலம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு திசை மாறக் கூடும் என்றும் இறுதித் தீர்ப்பு வெளிவருவது மேலும் தாமதமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக, தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மே 16ஆம் தேதிக்கு முன்பாக ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாவதற்கு வாய்ப்பில்லை எனக் கருதப்படுகின்றது.