பிரசல்ஸ் – மூன்று நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக பெல்ஜியம் சென்ற பிரதமர் மோடிக்கு, பிரசல்ஸ் விமான நிலையத்தில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகள் பயணத்தை மேற்கொள்கிறார்.
முதலில் அவர் பெல்ஜியம் நாட்டுக்கு நேற்று பின்னிரவு புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் விமான நிலையத்தில் இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசல்ஸ் நகரில் நடைபெறும் 13-ஆவது இந்திய-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். அந்நாட்டு பிரதமர் சார்லஸ் மைக்கேலுடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை தொடங்கி வைக்கிறார்கள்.
பிரசல்ஸ் நகரில், கடந்த வாரம் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். எனவே, பிரசல்ஸ் பயணத்தின்போது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தான், மோடியின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசல்ஸ் நகரில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு 31 மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதிகளில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
அமெரிக்க பயணத்துக்கு பிறகு, பிரதமர் மோடி, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்துக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர், டெல்லி திரும்புகிறார் என பிரதமரின் அதிகாரபூர்வ பயண திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.