Home கருத்தாய்வு பாலாவின் மரணத்தோடு பல ரகசியங்கள் மறைந்து போகுமா?

பாலாவின் மரணத்தோடு பல ரகசியங்கள் மறைந்து போகுமா?

842
0
SHARE
Ad

PI-Bala---Feature

கோலாலம்பூர், மார்ச் 15 – தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.40 மணியளவில் ரவாங்கில் மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்தில் மதிய உணவருந்திக் கொண்டு இருந்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

#TamilSchoolmychoice

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நாள் முதல் பி.கே.ஆரின் பிரச்சாரங்களில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த பாலாவிற்கு, கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று கோத்தா பாருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகான மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் இரத்தக்குழாய் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்தில் பிரதமரை சம்பந்தப்படுத்தி சத்தியப் பிரமாண வாக்குமூலத்தைப் பதிவு செய்ய தனக்கு 7 லட்சம் வெள்ளி  அன்வார் வழங்கியதாக, ராஜா பெட்ரா கமாருதின் கூறியதையடுத்து, கடந்த மார்ச் 11 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து மறுப்பு அறிக்கை வெளியிட்ட அவர், தனக்கு இதயத்தில் இரத்தக்குழாய் அடைப்பு இருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும், தான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தது நல்லதாகி விட்டது என்றும் இல்லையென்றால் தனக்கு இப்படி வியாதி இருப்பது தெரியாமல் அங்கேயே இறந்திருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

பாலாவின் இதய அறுவை சிகிச்சைக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், இன்று காலை சுபாங் ஜெயாவிலிலுள்ள மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சை முடிந்து எந்தவித பிரச்சனையுமின்றி வீடு திரும்பிய பாலா மதியம் காலமானார்.

அல்தான்துன்யா கொலை வழக்கில் வெளிச்சத்திற்கு வந்தவர்

கடந்த சில ஆண்டுகளாக, மலேசியத் தகவல் ஊடகங்களின் பிரதான கதாநாயர்களில் ஒருவராக வலம் வந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாலாவின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, பிரதமருக்கு எதிராக அவர் கூறியுள்ள தகவல்களின் அடிப்படையில் 13வது பொதுத் தேர்தலில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் அதனால் தேசிய முன்னணியின் செல்வாக்கும், பிரதமரின் செல்வாக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

பாலாவின் மறைவு அரசியல் ரீதியாக மக்கள் கூட்டணிக்கு பலத்த பின்னடைவு என்றுதான் கூற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அல்தான்துன்யா வழக்கு விசாரணையின் போது பாலாவின் பெயரும் அவரது செயல்களும் வெளிவந்தன.

அதன்பின்னர், பிரதமர் நஜிப்பையும், அவரது மனைவி ரோஸ்மாவையும் சம்பந்தப்படுத்தி ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை அவர் வெளியிட்டார்.

ஆனால் மறுநாளே அந்த வாக்குமூலம் பொய் என்று கூறி இரண்டாவது வாக்குமூலம் ஒன்றைத் தனது வழக்கறிஞருடன் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில், ரகசியமாக நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறியவர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பேட்டிகளையும் தகவல்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னால் நாடு திரும்பியவர், தனது இரண்டாவது வாக்குமூலம் நெருக்குதலின் காரணமாக பெறப்பட்டது என்றும் தனது முதல் வாக்குமூலம்தான் உண்மையானது என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, 13வது பொதுத் தேர்தலில் தான் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக நாடு முழுமையிலும் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், தேசிய முன்னணி அரசாங்கத்தை மாற்றுவதற்கான தருணம் வந்து விட்டது என்றும் கூறியிருந்தார்.

பாலாவின் ரகசியங்களும் புதைந்து போகுமா?

இத்தகைய சூழ்நிலையில் அவரது அகால மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அல்தான்துன்யா மரணம் தொடர்பாக பாலாவுக்கு ஏராளமான விவரங்கள் தெரிந்திருந்தன.

ஆனால் அவை எல்லாம் முறையே ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவா அல்லது அவரது மனப் பெட்டகத்தில் உறங்கிக் கொண்டிருந்த அந்த ரகசியங்கள் எல்லாம் அவரது மரணத்தோடு புதையுண்டு போகுமா என்பதுதான் இப்போது அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி.

தனக்கு தெரிந்திருந்த ரகசியத் தகவல்களை அவர் வழக்கறிஞர்கள் மூலமாகவோ, அல்லது நண்பர்கள் மூலமாகவோ எங்காவது பதுக்கி வைத்திருந்தாரா என்பதும் தெரியவில்லை.

அல்தான்துன்யா மரணத்தில் வெளிவந்த பாலா குறித்த மர்மங்கள், இன்று அவரது மரணம் வரை தொடர்ந்து கொண்டிருப்பது விதியின் விளையாட்டு என்றுதான் கூற வேண்டும்.

அந்த மர்மங்கள் பாலாவின் மரணத்திற்கு பின்னரும் தொடருமா அல்லது அவரது மரணத்தோடு ஓய்ந்து போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.