பிரசல்ஸ் – பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
பிரசல்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பெல்ஜியம் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்திய மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு தீவிரவாத தாக்குதல்களில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேசன் உள்ளிட்டவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மோடி பெல்ஜியம் பிரதமர் மதிய விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:- “தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு நின்று போரிட வேண்டும். இதில் இந்தியா 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. தீவிரவாதத்தை எதிர்த்து எல்லா நாடுகளும் போரிட வேண்டும். நாம் இன்றைக்கு ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கிற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவும், பெல்ஜியமும் ரத்த உறவினை கொண்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் இங்கு வந்து போரிட்டனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் வீர மரணம் அடைந்தனர்” என அவர் கூறினார்.