கோலாலம்பூர் – ‘த வோல்ப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்’ (The Wolf of Wall Street) என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிதியுதவி செய்திருப்பதாகக் கூறப்படுவதை 1எம்டிபி மறுத்துள்ளது.
இது குறித்து 1எம்டிபி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “1எம்டிபி நிறுவனம் ரெட் கிரானைட் பிக்சர்சில் நிதி முதலீடோ அல்லது நிதி பரிமாற்றமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யவில்லை. இது தொடர்பாக கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த வோல்ப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் அமெரிக்க நிறுவனமான ரெட் கிரானைட் பிக்சர்ஸ் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (389 மில்லியன் ரிங்கிட்) முதலீடு செய்திருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
ரிசா அசிஸ் மற்றும் ஜோய் மெக்பார்லாண்ட் ஆகிய இருவரும் அதில் இணை தயாரிப்பு செய்திருந்ததாக, கடந்த 2010-ம் ஆண்டு ரெட் கிரானைட் பிக்சர்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ரிசா அசிஸ் என்பவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது.