சென்னை – திருவள்ளூர், சேலம் மேற்கு, வேலூர் (மத்தி), ஈரோடு தெற்கு-வடக்கு, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களின் தேமுதிக செயலாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேமுதிக கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தேமுதிக பொருளாளர் செஞ்சி சிவாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் கட்டுப்பாட்டை மீறி, தேமுதிகவுக்கு களங்கம் விளைவித்ததால் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ள விஜயகாந்த், நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
தேமுதிகவில் பிளவு ஏற்பட்டபின் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சந்திரகுமார் கட்சி மாறியவர்களின் சார்பில் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சந்திரகுமாரையும் விஜயகாந்த் நீக்கியுள்ளார்.
தேமுதிகவில் ஏற்பட்ட பிளவுக்கு திமுகதான் பின்னணியில் இருந்து செயல்படுகின்றது என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேமுதிகவிலிருந்து விலகியுள்ள அதிருப்தியாளர்கள் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம் என்று கூறியுள்ளனர்.
தோல்வி பயத்தால் திமுக இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகின்றது என மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.