சென்னை – தேமுதிகவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் திமுகவின் தந்திரங்கள் பலிக்காது என்று சூலூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கும் திமுக, இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருதைக் கண்டு பொறுக்க முடியாமல் கூட்டணியை பலவீனப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது.
முதலில் மதிமுகவை பலவீனப்படுத்த முயன்ற திமுக, அந்த முயற்சி பலன் அளிக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தது. இப்போது தேமுதிகவை பலவீனப்படுத்த பல்வேறு தந்திரங்களை திமுக கையாளுகிறது. ஆனால், திமுகவின் இந்த முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது.
திமுகவில் சேர்ந்தால் பணம், பதவி அளிப்பதாகக் கூறி திமுகவினர் என்னையும் அழைத்தனர். செல்பேசி மூலமாக செவ்வாய்க்கிழமை மாலை அழைத்து பேசினர். ஆனால், நான் விஜயகாந்த் மீது கொண்ட நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தவன்.
எப்போதும் தேமுதிக மட்டுமே எனது கட்சி. திமுகவினரின் அழைப்பை நான் நிராகரித்து விட்டேன். ஒரு சிலர் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு சென்று விட்டனர் என்றார்.