கோலாலம்பூர் – ‘த ஜங்கிள் புக்’ இன்று இந்தியா, மலேசியா உட்பட பெரும்பாலான நாடுகளில் வெளியாகியிருக்கும் ஒரு ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம். 2016-ம் ஆண்டு வெளியாகியிருந்தாலும் கூட முந்தைய தலைமுறைகளுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு கதை.
இக்கதையைப் புத்தகங்களில் படித்தது ஒரு தலைமுறை, சின்னத்திரையில் சித்திரங்களாகப் பார்த்தது ஒரு தலைமுறை, தற்போது அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சியில், 3டி, ஐமேக்ஸ் 3டி முறையில் காண்கிறது இன்றைய தலைமுறை.
கதை உருவானது எப்போது?
1894-ம் ஆண்டில் ஆங்கில எழுத்தாளர் ருட்யார்டு கிப்லிங் உருவாக்கத்தில், சிறுகதைத் தொகுப்புகளாக வந்தது தான் ‘த ஜங்கிள் புக்’. இந்தியாவில் பிறந்து 6 வயது வரை அங்கு வளர்ந்தவரான ருட்யார்டு கிப்லிங், அதன் பின்னர் இங்கிலாந்து சென்றுவிட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், ஏறக்குறைய 6 ஆண்டுகள் இந்தியாவில் தங்கி பணியாற்றிய போது தான், ருட்யார்டு கிப்லிங் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். தனது ஆசை மகளுக்காக அவர் இந்தக் கதையை எழுதியதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது மகள் 1899-ம் ஆண்டு இறந்துவிட்டதாக வரலாறு சொல்கிறது.
படம் பார்க்கச் செல்வதே ஒரு சுகமான அனுபவம்
‘த ஜங்கிள் புக்’ திரைப்படத்தைக் காண தாத்தா, பாட்டி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் சகிதம் குடும்பத்தோடு பார்க்கச் செல்வதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.
காரணம், படம் பார்க்கச் செல்வதற்கு முன், தாத்தாவோ, பாட்டியோ தங்களது காலத்தில் இந்தக் கதை எப்படி பார்க்கப்பட்டது என்ற அனுபவத்தை பேரக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது வரலாம்.
அதை ஆவலோடு பேரக் குழந்தைகள் கேட்டுக் கொண்டு வரும் போதே, “அப்பல்லாம் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை டிவில தொடர் கதையா போடுவாங்க. உங்க அப்பாவுக்கு கருஞ்சிறுத்தை பகீராவ ரொம்ப பிடிக்கும். அது வரும் போதெல்லாம் அப்படி கைதட்டி ரசிச்சுப் பார்ப்பான்” என்று பாட்டி தனது பழைய நினைவுகளைக் கிளறுவார்.
“அப்படியா டாடி” என்று பேரக்குழந்தை தனது அப்பாவைப் பார்த்து சிரித்தபடி கேட்கும். ஒரு புன்னகையுடன் அப்பா தனது சிறுவயது நினைவுகளை அசைபோட்டு தான் உடன் பிறந்தவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து பார்த்து ரசித்த அனுபவங்களைப் பகிர்வார்.
இப்படியாக ‘ஜங்கிள் புக்’ திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும் போதே தலைமுறைகள் கடந்து, பழைய நினைவுகள் யாவும் ஒரு சுற்று வந்து போவது தான் இப்படத்தின் சிறப்பு.
கதை என்ன?
குழந்தையாக இருக்கும் போதே காட்டில் அநாதையாக விடப்படும் சிறுவன் மௌக்லியை, ராக்ஷா என்ற பெண் ஓநாய் தனது குட்டிகளோடு, குட்டியாக எடுத்து வளர்க்கிறது. காட்டில் மிருகங்களோடு சேர்ந்து அதன் குணத்திலேயே மௌக்லி வளர, அவனுக்கு உற்ற நண்பனாகவும், பாதுகாவலனாகவும் இருக்கிறது கருஞ்சிறுத்தை பகீரா.
என்ன தான் மிருகங்களோடு வளர்ந்தாலும், அவ்வப்போது மனித மூளை வேலை செய்துவிடுகிறது மௌக்லிக்கு. இதனால் மிருகங்கள் அவனை ஆச்சர்யத்தோடு பார்க்க ஆரம்பிக்கின்றன.
இதனிடையே, மௌக்லியின் அப்பாவைக் கொன்று அவன் காட்டில் அநாதையாவதற்குக் காரணமாக இருப்பது ஷேர்கான் என்ற கொடூரப்புலி. அசுரத்தனமான வளர்ச்சியும், கண்களில் வன்மமும் வைத்துக் கொண்டு அது காட்டில் வலம் வரும்போது சிறிய மிருகங்களுக்கு குலைநடுங்கிவிடுகின்றது.
காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தனது கொடூர குணத்தால் மிரட்டி, நாட்டாமை செய்து கொண்டு வரும் ஷேர்கானுக்கு மனிதக் குழந்தையான மௌக்லி காட்டிலிருப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவனை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று துடிக்கிறது.
ஒருபக்கம் ஷேர்கானிடமிருந்து மௌக்லியைக் காப்பாற்றப் போராடுகிறது ராக்ஷா. இன்னொரு பக்கம் அவனை எப்படியாவது மனித குலத்தோடு பாதுகாப்பாக சேர்த்துவிடத் துடிக்கிறது பகீரா. இவற்றுக்கு நடுவில் ‘சிகப்புப் பூ’ வேண்டும் என்று குரங்குகளின் அரசன் கையிலும் சிக்குகிறான் மௌக்லி. இறுதியில் மௌக்லிக்கு என்ன ஆனது? என்பதே உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ்.
2016 ஜங்கிள் புக் எப்படி இருக்கிறது?
சிஜிஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் அத்தனை தத்ரூபமாக இருக்கின்றன. அதிலும் 3டி-யில் பார்க்கும் போது, காடுகளும், மிருகங்களும், பிரம்மாண்டமான அருவிகளும் நிஜக்காட்டுக்குள் நாம் வாழ்வதைப் போன்ற ஒரு உணர்வைத் தருகின்றது. அதோடு, மனித மொழி பேசிக் கொண்டு திரியும் மிருகங்களின் முகபாவனைகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு.
தாய்மை உணர்வை முகத்தில் அள்ளித் தெளிக்கிறது ராக்ஷா. எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மௌக்லியை ஒரு அண்ணனைப் போல கண்டித்துக் கொண்டே இருக்கிறது பகீரா. நண்பனாக மௌக்லியின் பிரிவைத் தாங்க முடியாமல் அவனிடம் தேவையில்லாமல் எரிந்து விழுகிறது கரடி பலூ. இப்படியாகப் பல இன்பங்கள். குறிப்பாக, மௌக்லி கதாப்பாத்திரத்தில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் நீத் சேத் நடித்துள்ளான். அவ்வளவு அற்புதமான நடிப்பு.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தை “எனக்கு ஓநாய் குட்டி வேணும்” என்று கேட்டு அடம்பிடித்தாலோ, யானை, புலியைப் பார்த்து அச்சத்தில் மிரண்டாலோ ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அதற்காகத் தான் இந்தியா போன்ற நாடுகளில் தணிக்கையில் அதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோர் துணையுடன் தான் குழந்தைகள் படம் பார்க்க முடியும் என்கிறது இந்திய தணிக்கைக் குழு. குறிப்பாக இறுதிக்காட்சிகளில் ஷேர்கானின் கொடூர முகம் அப்பப்பா அவ்வளவு தத்ரூபம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை மிகச் சிறப்பாக காட்சிகளாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜான் ஃபௌரீக். அவருக்கு உற்ற துணையாக பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜான் டெப்னி.
“இதுவரைக்கும் ஓநாய் மாதிரி சண்டை போட்ட.. இனி மனுசன் மாதிரி சண்டை போடு” என்று கடைசியில் பகீரா சொல்லும் ஒரு அற்புத வசனம் ஒரு நிமிடம் நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடுகின்றது. காடுகள், மிருகங்களின் மீதான பற்று இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிடுகின்றது.
மொத்தத்தில், இந்த அற்புதமான கதையை அறிந்து கொள்வதில் இன்றைய தலைமுறை மகிழும், சித்திரமாகப் பார்த்த கதையை இவ்வளவு சிறப்பான தொழில்நுட்பத்தில் கண்டு முந்தைய தலைமுறை மிரளும், காகிதத்தில் வந்த கதை, தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நிஜத்தில் நடப்பதைப் போல் காட்சிகளாக மாறியிருப்பதைக் கண்டு மூத்த தலைமுறை அகம் குளிர்ந்து போகும்.
ஆக, குடும்பத்தோடு ஜாலியாகப் போய் 3டி தொழில்நுட்பத்தில் கண்டு களித்துவிட்டு, அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டபடி வீடு வந்து சேர, ஒரு மிகச் சிறந்த திரைப்படம் இந்த ‘த ஜங்கிள் புக்’.
-ஃபீனிக்ஸ்தாசன்