ரியோடிஜெனிரோ – பிரேசில் நாட்டில் 2011-ஆம் ஆண்டு முதல் அதிபராக இருப்பவர் தில்மா ரூசெப் (வயது 68). பட்ஜெட் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக அவரது அரசு, நிதி விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் மீது குற்ற தீர்மானம் தாக்கல் செய்து, பதவியை பறிப்பதற்கு எதிர்க்கட்சியினர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இந்நிலையில், அவர் மீது பதவி பறிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்ற சிறப்பு குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில் தில்மா மீதான நடவடிக்கைக்கு ஆதரவாக 38 பேரும், எதிராக 27 பேரும் வாக்கு அளித்தனர். இதற்கு தில்மா எதிர்ப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆனால் அவருடைய ஆதரவாளர்கள், தில்மாவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி இது என கூறி கண்டனம் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக தில்மா மீதான குற்றச்சாட்டு தீர்மானம், நாடாளுமன்ற கீழ்சபையில் 17-ஆம் தேதி கொண்டு வரப்படும்.
அங்கு தீர்மானம் நிறைவேறி விட்டால் மேல்-சபையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது ஏற்கப்பட்டால், அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையையொட்டி 180 நாட்கள் வரை அவரை இடைநீக்கம் செய்ய முடியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் துணை அதிபர் மிக்கேல் டெமர் அதிபர் பொறுப்பை ஏற்பார்.