புத்ராஜெயா – சமையலுக்காக கசகசா (Poppy Seeds) பயன்படுத்தப்படுவதையோ, அதற்காக இறக்குமதி செய்யப்படுவதையோ அரசாங்கம் தடை செய்யவில்லை என்ற சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பதற்காக கசகசா பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டுள்ள டாக்டர் சுப்ரா, அவை மிகச் சிறிய அளவில் தான் பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
“இருந்தபோதிலும், தவறான காரியங்களுக்கு அதைப் பயன்படுத்தாத வகையில் கண்காணிப்போம். ஏதாவது கடைகளில் கசகசா அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்தால் பொதுமக்கள் உடனடியாக எங்களுக்குத் தகவல் அளிக்க வேண்டும்” என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.
நேற்று மலேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், கசகசா பயன்படுத்தப்பட்டு ‘லெமன் பாப்பி சீட்ஸ் கேக்’ என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் கேக்கை சாப்பிட்டால் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.