Home இந்தியா ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் : மலேசியாவரை விரியும் மர்மவலை!

ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் : மலேசியாவரை விரியும் மர்மவலை!

254
0
SHARE
Ad

புதுடில்லி : தமிழ் நாட்டின் இன்றைய சூடான செய்தி, திமுக கூட்டணி தேர்தல் உடன்பாடு காணப்பட்ட விவகாரமல்ல! மாறாக, 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலைக் கையாண்ட ஜாபர் சாதிக்கின் கைதும் – அவருக்கும் திமுகவுக்கும் எவ்வளவு தூரம் தொடர்பு என்பதும்தான்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தைத் தீர விசாரிக்க வேண்டும் என ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்து விட்டார். போதைப் பொருள் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறது என்றும் சாடியிருக்கிறார்.

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் 3,500 கிலோ போதைப் பொருளை பல நாடுகளுக்கு கடத்தியிருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பதாக, இந்திய தேசிய போதைப் பொருள் புலனாய்வு பிரிவு தலைவர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடத்தப்பட்ட நாடுகளில் மலேசியாவும் முக்கிய இடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய போதைப் பொருள் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையம் மலேசியா வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவிலும் ஜாபர் சாதிக் தொடர்புடைய கும்பல்கள் பிடிபட வாய்ப்புள்ளது. எனவே, ஜாபர் சாதிக்கின் கைதால் திமுவுக்கு பெரும் தலையிடி என்பதுடன் அவரால் போதைப் பொருள் கடத்தப்பட்ட நாடுகளிலும் சில கடத்தல் கும்பல்கள் சிக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜெய்ப்பூரில் பிடிபட்ட ஜாபர் சாதிக் தற்போது புதுடில்லியில் விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அனைத்துலக அளவில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பிடிபடும்போது அவர்கள் குறித்த தகவல்கள் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

அந்த வகையில் இந்தியாவும் மலேசியாவும் ஜாபர் சாதிக் விவகாரத்தில் தற்போது தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.