சூரிக் – 1எம்டிபி நிறுவனம் முறைகேடான பண பரிமாற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையில், தனது விசாரணைகளை ஏற்கனவே தொடக்கியுள்ள சுவிட்சர்லாந்து, தற்போது தனது புலனாய்வுகளை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய புலனாய்வுகள் மீண்டும் நஜிப்பின் குடும்பத்தினரை நோக்கிப் பாய்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து 2009 முதல் 2013 வரை மேற்கொள்ளப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சுவிட்சர்லாந்து தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, தங்களின் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுகின்றன என்று கூறியுள்ள சுவிஸ் அதிகாரிகள் தற்போது, ஐக்கிய அரபு சிற்றரசுவைச் சேர்ந்த மேலும் இரண்டு அதிகாரிகள் மீது இது தொடர்பில் விசாரணைக் கோப்புகளை திறந்துள்ளனர்.
தற்போது புதிதாக முளைத்துள்ள விசாரணை என்னவென்றால், 2012இல் 1எம்டிபி நிறுவனம் இரண்டு மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களை வாங்கியபோது, அதற்கான உத்தரவாதங்களை அபுதாபி அரசு நிதி மையம் வழங்கியது. இந்த உத்தரவாதங்களுக்கு ஈடாக தரப்படுகின்றது என்ற போர்வையில் கோடிக்கணக்கான டாலர்கள் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயர் அபுதாபி நிதி மையத்தின் பெயரைக் குறிப்பிடும் பெயரைப் போன்று ஒத்திருந்தது.
ஆனால், இந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை-அது எங்களின் நிறுவனம் இல்லை – என அபுதாபி நிதி மையம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இலண்டன் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றது. இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, இந்தப் பணம் இரண்டு எமிரேட்ஸ் அரசாங்க அதிகாரிகளுக்கும், “திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்” ஒன்றுக்கும் கைமாறியிருக்கிறது என்ற கோணத்தில் சுவிட்சர்லாந்து புலனாய்வுத் துறையின் விசாரணைகள் தற்போது விரிவாகியிருக்கின்றன
ஏப்ரல் தொடக்கத்தில், வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி ஒன்றில், 1எம்டிபி தொடர்பான சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு கைமாறியிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரெட் கிரானைட் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் நஜிப்பின் மனைவி ரோஸ்மாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவரான ரிசா அசிஸ் ஆவார்.
இந்த ரெட் கிரானைட் நிறுவனம்தான் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோர்னாடோ டி காப்பிரோ நடித்த ‘தெ வோல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற படத்தைத் தயாரித்திருந்தது.
இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ரெட் கிரானைட் நிறுவனம் தாங்கள் எந்தவித பணத்தையும் 1எம்டிபியிடமிருந்து பெறவில்லை என்றும், எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் பதிலளித்திருந்தது.