சென்னை – மூன்ற தலைமுறை நடிகர் களை உருவாக்கிய சிவாஜி குடும்பத்தில், மூத்த மகன் நான்’’ என்று கமல்ஹாசன் கூறினார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், எம்.பால விஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா.’
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, இயக்குநன் மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:- ‘‘தேவர் மகன் படத்தில், ‘‘விதை நான் போட்டது’’ என்று சிவாஜி சொல்வார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். சின்ன வயதில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரையும் நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர்கள் மடியில் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை இருந்தது”.
“எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் மிகப்பெரிய சாதனையாளர்கள், மிகப்பெரிய நடிகர்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. போக் ரோடு வழியாக போகும்போது, நடிகர் திலகத்தின் ‘அன்னை இல்லம்’ வீட்டை வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன். இந்த வீட்டுக்குள் போக முடியுமா? என்று ஏங்கியிருக்கிறேன்”.
“பிறகு அதே வீட்டில் எனக்கு அன்பும், ஆதரவும் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். அந்த வீட்டின் மூத்த மகன், நான். சிவாஜி ரசிகர்கள் கம்பீரமாகத்தான் நடப்பார்கள். அவருடைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் இவ்வளவு பணிவாக இருப்பதை எண்ணி வியக்கிறேன். என் மகள் சுருதிக்கு விக்ரம் பிரபுவை காட்டி அறிவுரை சொல்ல நினைக்கிறேன்”.
“மூன்று தலைமுறை நடிகர்களை உருவாக்கி இருக்கிறது, எங்கள் குடும்பம். நான் ஆசைப்பட்டபடியே ‘தேவர் மகன்’ படத்தில் நடிகர் திலகத்துடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது, என் பாக்கியம். அந்த படத்தில் நடித்தபோது, அவருக்கு எப்படி வசனம் சொல்லிக் கொடுப்பது? என்று தயங்கினேன்”.
“ஒரு நல்ல வசனம் எழுதி விட்டால், உடனே அவர் பாராட்டுவார். இது, என் குடும்ப விழா. இந்த விழாவுக்கு என்னை அழைக்காமல் விட்டு விடாதீர்கள் என” கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், இசையமைப்பாளர்கள் டி.இமான், விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.