புதுடெல்லி – மலையாள நடிகரும் பாஜகவின் நட்சத்திர பேச்சாளருமான சுரேஷ்கோபியை நாடாளுமன்ற நியமன உறுப்பினராக (எம்.பி.யாக) நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்ற முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து இடதுசாரிகளின் வாக்கு வங்கியான ஈழவா மக்களின் பிரதிநிதிகள் மூலம் தனிக்கட்சி தொடங்கி வைத்து, அதனுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே வரும் மே 16-ஆம் தேதி கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபியை வேட்பாளராக்க பாஜக தீவிரமாக முயற்சித்தது. ஆனால் சுரேஷ்கோபி இதனை நிராகரித்துவிட்டார்.
தற்போது கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பிரச்சாகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சுரேஷ்கோபி. இந்நிலையில் சுரேஷ்கோபியை கலைத்துறை சார்பிலான நாடாளுமன்ற நியமன உறுப்பினராக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேரை குடியரசுத்தலைவர் தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நியமிக்க முடியும். இந்த கோட்டாவின் கீழ்தான் தற்போது சுரேஷ்கோபியை நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுரேஷ்கோபி நாடாளுமன்ற உறுப்பினராகும் நிலையில் அவர் மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான குழு, கேரளாவுக்கு எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை. ஆகையால் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.