சென்னை – ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்கள் உயிரிழந்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலத்தில் நேற்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விருத்தாச்சலம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெயிலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல் துறையோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனவே, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டும். இத்தகைய தடையின் மூலமாகத்தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இந்த தடையை உடனடியாக விதிக்கவில்லையெனில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.