Home Featured நாடு பாழடைந்த ஹைலேண்ட் டவர்ஸ் குடியிருப்புகள்: குற்றவாளிகளின் மறைவிடமாக மாறிவிட்டன!

பாழடைந்த ஹைலேண்ட் டவர்ஸ் குடியிருப்புகள்: குற்றவாளிகளின் மறைவிடமாக மாறிவிட்டன!

626
0
SHARE
Ad

????????????????????????????????????

கோலாலம்பூர் – 23 ஆண்டுகளுக்கு முன்பு சரிந்து விழுந்து 48 உயிர்களைக் காவு வாங்கிய அம்பாங் ஹைலேண்ட் டவர்சின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்று தற்போது, திருடர்களும், குற்றவாளிகளும் பதுங்கிக் கொள்ளும் மறைவிடமாக மாறிவிட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குற்றவாளிகளின் மறைவிடமாகிவிட்ட அப்பகுதியில் உள்ள இரண்டு ஆளில்லா கட்டிடங்களை இடித்துத் தள்ளும் படி, தாமான் ஹில்வியூ மற்றும் தாமான் ஸ்ரீ உகாய் குடியிருப்பு வாசிகள் தற்போது கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து 1000 குடியிருப்பு வாசிகள் சார்பாக தாமான் ஸ்ரீ உகாய் ஹில் வியூ குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் சித்தி ஹெண்டான் சீக் வெளியிட்டுள்ள தகவலில், 23 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு சரிந்து விழுந்த பிறகு, மற்ற இரண்டு கட்டிடங்களும் குடியிருப்பாளர்கள் இன்றி அநாதையாக விடப்பட்டன. தற்போது அவற்றில் குற்றவாளிகளும், போதைப் பித்தர்களும் மறைமுகமாகத் தங்கி வரும் இடமாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அக்கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என்றால், அந்நிலத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மிக விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, அப்பகுதியில் அதிரடியாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினர், பாழடைந்த அந்தக் கட்டிடங்களில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 6 பேரில் 3 பேரை சுட்டுக் கொன்றனர். மீதி மூன்று பேர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக காவல்துறை அறிவித்தது.

இச்சம்பவத்தை அடுத்து தற்போது அப்பகுதி குடியிருப்பாளர்களிடையே இந்த விவகாரம் மேலும் பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.