Home Featured தமிழ் நாடு ஜாதி மோதலுக்குத் திட்டம்தான் நான் தேர்தலில் விலகல் காரணம் – வைகோ விளக்கம்!

ஜாதி மோதலுக்குத் திட்டம்தான் நான் தேர்தலில் விலகல் காரணம் – வைகோ விளக்கம்!

709
0
SHARE
Ad

vaiko_34சென்னை – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகீர் காரணங்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும், வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர் முயல்கிறார்கள்.

நான் போட்டியிடுவதாக அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள் இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான் உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள்.

#TamilSchoolmychoice

அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார்.  இதைக் கண்டித்துத்துத் தி.மு.க. தலைமை எந்த  அறிக்கையும் தரவில்லை.   தந்தை பெரியாரின் தலைமை, பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?

கோவில்பட்டி பிரசாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம்.

ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி ஜாதி வேற்றுமையையும், ஜாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது.

அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர் சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு மணியில் இருந்தே முழு மது போதையில், ஜாதியைக் குறித்து என்னை வசைபாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

ஜாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர்.

நான் பிரச்சார வேனில் ஊருக்குள் சென்று, தேவர் சிலைக்குச் சற்றுத் தொலைவில் வேனை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி தேவர் சிலை நோக்கிச் சென்றபோது, பத்துப் பேர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே, சங்கர் கொலையைப் பற்றிப் பேசினவனுக்கு இங்கே என்னடா வேலை? தேவர் சிலைக்கு மாலை போட விட மாட்டோம். மரியாதையாத் திரும்பிப் போ என்று கூச்சல் போட்டனர்.

அவர்கள் திட்டமிட்டுக் கலகத்திற்கு முனைகிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பி பிரச்சார வேனுக்குச் சென்றேன். நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்;
என்னைக் குறிவைத்துச் ஜாதி மோதல் ஏற்படுவதையும், இரத்தக்களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் பெயரை முழு சம்மதத்துடன் அறிவித்தேன் என வைகோ கூறினார்.