Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: திமுக மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கான ஒரே முக்கியக் காரணம்: மு.க.ஸ்டாலின்!

தமிழகப் பார்வை: திமுக மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கான ஒரே முக்கியக் காரணம்: மு.க.ஸ்டாலின்!

1506
0
SHARE
Ad

stalinசென்னை – நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டாலும் திமுகவின் பிரம்மாண்டமான வெற்றி, மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அதனை மீண்டும் நிலை நிறுத்தி விட்டது.

பல கோணங்களில் இருந்து பார்க்கும்போதும் தேர்தலுக்கு முன்பாக இறங்குமுகமாகத் தென்பட்ட திமுகவின் ஆதரவுத் தளம் – தேர்தல் வாக்களிப்பு நெருங்க நெருங்க  அசுர பலம் பெற்று – பல இடங்களில் அதிமுகவுக்கு கடுமையான போட்டியை அது வழங்கியிருக்கின்றது.

தேர்தல் தொடங்கியபோது திமுகவின் பலவீனங்களாக இருந்தவை…

#TamilSchoolmychoice

தேர்தல் தொடங்கியபோது திமுகவில் பலவீனங்களாகப் பின்வரும் அம்சங்கள் பார்க்கப்பட்டன:-

  • குடும்பக் கட்சியாகப் பார்க்கப்பட்டது. முக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டதும், கலைஞரின் அடுத்த வாரிசாக அறிவிக்கப்பட்டதும் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கனிமொழிக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், கலைஞர் சென்ற இடங்களில் எல்லாம் தயாநிதி அவரது பக்கத்தில் அமர்ந்திருந்ததும் பலரை முகஞ்சுளிக்க வைத்தது.
  • Karunanithi-train-chennai-thirvarurகலைஞர் சென்னையிலிருந்து பிரச்சாரத்திற்காக இரயில் மூலம் திருவாரூர் சென்றபோது, உடன் சென்ற தயாநிதி மாறன்-ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றில் சிக்கியிருக்கும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரான தயாநிதி கூட்டங்களில் கலைஞர் பக்கம் எப்போதும் இருந்ததும், அவரே ஊழல் பற்றி கருத்துரைத்ததும், அதிருப்தியை ஏற்படுத்தியது… 
  • காங்கிரசின் கூட்டணி 2ஜி ஊழல் கூட்டணியாகவும், ஈழத் தமிழர்களைக் கைவிட்ட கூட்டணியாகவும் பார்க்கப்பட்டது.
  • பல தொகுதிகளில் திமுகவின் பெரும் புள்ளிகளுக்கும், கடந்த கால பெரிய தலைவர்களின் மகன்களுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டதும் குறை கூறல்களுக்கு வழிவகுத்தன.
  • காங்கிரசைத் தவிர மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ள முடியாதது திமுகவுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
  • மக்கள் நலக் கூட்டணி மற்றும் தேமுதிக இரண்டும் அதிமுகவைப் போன்றே, திமுகவுக்கு எதிராகவும் எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டது திமுகவின் ஆதரவைக் கீழிறக்கிய மற்றொரு அம்சம்
  • கலைஞரின் மற்றொரு மகன் அழகிரி களத்தில் இல்லாதது ஒரு கோணத்தில் பலவீனமாகப் பார்க்கப்பட்டாலும், இன்னொரு கோணத்தில் அதுவும் ஒரு பலமாகத்தான் பார்க்கப்பட்டது. திமுகவில் கலைஞருக்குப் பிறகு, வாரிசு என்ற முறையிலும், கட்சியைத் தாண்டி பொதுவான அரசியல் செல்வாக்கு என்ற முறையிலும், ஸ்டாலின் முன்னணிக்கு வந்தார்.

DMK-Election Manifesto-Karunanithi-Stalinதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது, மேடையில் கலைஞருடன், ஸ்டாலின், கனிமொழி….

ஆனால் இந்த பலவீனங்களையெல்லாம் மீறி திமுக கூட்டணி இத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கான அடிப்படைக் காரணங்கள்,

அதன் வலுவான – தமிழக மண்ணில் ஆழப் புதைந்திருக்கும் அதன் உட்கட்டமைப்பு – மற்றும் அதன் பண பலமும்தான்.

ஜெயலலிதாவுக்கு ஏன் ஆதரவு குறைந்தது?

ஜெயலலிதா மீது எழுந்த வெறுப்பு – மாற்றம் வேண்டும் என சில மையங்களில் எழுந்த அறைகூவல் –

ஜெயலலிதாவின் பிரச்சாரங்கள் மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு –

jayalalithaaவெள்ளத்தால் ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் அதிமுக எதிர்ப்பு வாக்குகளாக மாறும் என்ற எதிர்பார்ப்பு – வரலாற்று ரீதியாக மாறி மாறித்தான் ஆட்சி அமையும் என்ற ஆரூடங்கள் – இப்படியான காரணங்களால், திமுக தொண்டர்களும், தலைவர்களும் இந்த முறை சுறுசுறுப்பாக களப்பணியாற்றினார்கள்.

அதிமுகவுக்கு சரிசமமாக கோடிக்கணக்கான பணம் திமுக தரப்பிலும் செலவழிக்கப்பட்டது. பணபலம் மிக்கவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர் என்பதுடன், கட்சியுன் கோடிக்கணக்கில் செலவு செய்தது.

ஆனால், இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, மக்களுக்கு திமுக பரவாயில்லை மீண்டும் ஒரு வாய்ப்பு தரலாம் என நினைக்க வைத்த ஒரே அம்சம் என்னவென்று பார்த்தோமானால் நம் முன்னே விசுவரூபமெடுத்து நிற்பது ஒரே ஒரு காரணம்தான்!

அதுதான் மு.க.ஸ்டாலின்!

மற்றவர்களைப் போல ஸ்டாலின் மீது தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாததும் அவர் மீதான தோற்றத்தை மக்கள் மனங்களில் ஓரளவுக்கு உயர்த்தியது எனலாம்!

நமக்கு நாமே தொடக்கி வைத்தது ஒரு தீப்பொறி

Stalin-Namakku Naameஎந்த ஒரு அரசியல் வெற்றிக்கும், மாற்றத்திற்கு ஒரு கவனிக்கத்தக்க தீப்பொறி, அல்லது ஒரு சர்ச்சை இருக்க வேண்டும். அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கும்போது, அதனால் ஏற்படும் விளம்பரங்கள், பிரபல்யம் மக்கள் முன் வைக்கப்படும்போதும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய வீச்சு, அந்த அரசியல் கட்சிக்குப் பெரும் பலமாக அமையும்.

1967 தேர்தலில் திமுகவுக்கு ஆட்சி பீடத்தில் அமர வழிகோலியது, இந்தி எதிர்ப்புப் போராட்டமும், எம்ஜிஆர், எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட சம்பவமும்!

1977இல் எம்ஜிஆர் என்ற முகம் – அவரது சினிமா ஆளுமை – ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. 1989இல் அதே எம்ஜிஆர் களத்தில் இல்லாததும், அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்து, இரட்டை இலை சின்னம் இல்லாமல் போட்டியிட்டதும்,  திமுக மீண்டும் ஆட்சிக்குத் திரும்ப வழிவகுத்தது.

1991இல் அதிமுக திரும்ப வந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்றால்  1996இல் ஜெயலலிதாவின் ஆடம்பரமும், வளர்ப்பு மகன் திருமணமும் அவரது ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் திமுகவைக் கொண்டு வந்தன.

2001இல் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதால் ஏற்பட்ட அனுதாபம் அவருக்கு மீண்டும் சிம்மாசனத்தைப் பெற்றுத் தந்தது.

ஆனால், மீண்டும் ஜெயலலிதா, கருணாநிதியைக் கைது செய்து காட்டிய வன்மம், பழிவாங்கல் – திமுக மீது அனுதாபத்தைப் பெருக்கி 2006இல் கலைஞருக்கு மகுடத்தை சூட்டியது.

ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் கலைஞரின் குடும்ப அரசியலும் – அவர்கள் நடத்திய அட்டகாசங்களும், அவர்களுக்கு எதிராகத் திரும்பின. அதனால், சிக்கிச் சீரழிந்த தமிழக மக்கள் இதற்கு ஜெயலலிதாவே பரவாயில்லை என அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தனர்.

Stalin_380அந்த வகையில் இந்த முறை திமுக பெற்ற வெற்றிகளுக்கு முன்னுரையாக அமைந்தது மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்த ‘நமக்கு நாமே’ நடைப் பயண பிரச்சாரம்!

நமக்கு நாமே குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஒரேயடியாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்டாலின் பக்கம் அந்த நடைப்பயணம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுவரை தமிழகத்தில் வாக்காளர்களைத் தலைவர்கள் அணுகும் முறைகளையும் அந்த நடைப் பயணமும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் மாற்றியமைத்தன.

இனியும் தலைவர்களின் அடுக்கு மொழி – அழகுத் தமிழ் பேச்சைக் கேட்க கூட்டமும் இளைஞர்களும் வரமாட்டார்கள் என்ற நிலையில், அதனை யூடியூப்பில் வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம் என்ற தொழில்நுட்ப யுகத்தில் – ஊர் ஊராக, 234 தொகுதிகளுக்கும் ஸ்டாலின் நடைப்பயணம் சென்றது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் எல்லா நடுநிலை செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஸ்டாலினின் நடைப் பயணத்தை விரிவாக ஒளிபரப்பின. சில தரப்புகளால் குறைகூறப்பட்டாலும், அந்த அடிப்படையில்கூட ஏன் குறை கூறுகிறார்கள் என்பதைக் காண மக்கள் அந்த நடைப் பயணத்தை அதிகமாகப் பார்த்தார்கள்.

இந்த நமக்கு நாமே நடைப்பயணம் கொடுத்த உத்வேகம் – தீப்பொறிதான், திமுக தலைவர் தள்ளுவண்டியில் முன்பு போல் சரளமாகப் பேச முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் – திமுகவை வாக்காளர்கள் மத்தியில் முனைப்புடன் உந்தித்தள்ளியது.

ஸ்டாலினின் வித்தியாசப் பிரச்சாரம்

Stalin-Namakku Naame-campaignஅடுத்து, தேர்தல் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததும், ஸ்டாலின் முன்னின்று நடத்திய பிரச்சாரமும் வித்தியாசமாக, மக்களை ஈர்க்கும் விதம் அமைந்தது.

முதல் கட்டமாக, வெள்ளை வேட்டி, சட்டை, கறுப்பு சிவப்பு துண்டுக்கு விடைகொடுத்தார் ஸ்டாலின். நாள்தோறும் நவீனமயமான, வண்ண வண்ண ஆடைகளில், உலா வரத் தொடங்கினார்.

எளிமையான மொழியில், மக்களுடன் கலந்துரையாடல் பாணியில் அமைந்த அவரது பிரச்சாரம், கருணாநிதியைப் போன்று தமிழ் மொழி ஆர்வலர்களை ஈர்க்கவில்லை என்றாலும், தேர்தலுக்கு தேவையான மக்கள் பிணைப்பை ஸ்டாலினுக்கு ஏற்படுத்தியது.

காலையில் எழுந்ததும் – எந்த ஒரு தமிழக அரசியல்வாதியும் செய்யாத பிரச்சார யுக்தியாக, அதிகாலையில் நடைப்பயிற்சி என்ற பெயரில் மக்கள் அதிகம்கூடும் இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார், அளவளாவினார்.

சைக்கிளில் சென்றார், ஆட்டோவில் தொங்கிக் கொண்டு போனார். சாலையோரக் கடையில் மக்களோடு, மக்களாக அமர்ந்து தேநீர் அருந்தினார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சில இடங்களில் கடந்த கால திமுக தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதும் அவரது பணிவை எடுத்துக்காட்டியது. அரசியலுக்காக, தேர்தலுக்காக அப்படிக்கூறுகின்றார் என்றாலும், கடந்த காலத் தவறுகளை அவர் உணர்ந்திருக்கின்றார் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியது.

கருணாநிதியின் குடும்ப அரசியல் பிரச்சாரத்தில் முக்கியமாகப் பேசப்பட்டபோது, ஒரு கட்டத்தில் தனது மகனும், மருமகனும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்ற அளவுக்கு அறிக்கை விடுத்தார் ஸ்டாலின்.

இப்படியாக ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரங்கள் திமுக மீது படிந்திருந்த சில கடந்த கால அழுக்குகளைத் துடைத்துச் சுத்தப்படுத்தியது எனலாம்.

வாரிசு அரசியல் என்பதையும் மீறி, கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையை கட்சியினரிடமும், கருணாநிதி, ஜெயலலிதாவைவிட இவர் கொஞ்சம் பரவாயில்லையே என நடுநிலை வாக்காளர்களையும் சிந்திக்க வைத்தது ஸ்டாலினின் பிரச்சாரத்தின் வெற்றிகள்.

தவற விட்ட கப்பலை மீண்டும் பிடிப்பது எப்போது?

Jayalalitha-swearing-vip-stalinஇருந்தாலும், இந்த முறை ஆட்சியைப் பிடிக்கத் தவறிவிட்ட ஸ்டாலினுக்கு எதிர்கால வாய்ப்புகள் எப்படியிருக்கும்?

அரசியலில் ஐந்தாண்டுகள் ஒரு கோணத்தில் குறுகியதுதான் என்றாலும், இன்னொரு கோணத்தில் மிக நீண்டது. அரசியல் வாய்ப்பு என்பது ஒருமுறை தவறவிட்டால், விட்டதுதான்! அதன் பின்னர் அதனை மீண்டும் எட்டிப் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல! எவ்வளவோ மாறிவிடக் கூடும்!

ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் அதிமுக உடையலாம் என்பதைத் தவிர அந்தக் கட்சியை உடைப்பது என்பதோ, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள் என்பதோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நடைபெற வாய்ப்பில்லை. பெரும்பான்மையும், கட்சித் தலைமையும் அத்தனை வலுவாக இருக்கின்றது.

தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தங்களின் 60 வயதைத் தாண்டிய முதுமையில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க மற்றொரு  விஷயம்.

அந்த வகையில் ஸ்டாலின் இன்று இளம் வயதுக்காரராக துடிப்புடன் காணப்பட்டாலும் அவருக்கு இப்போது வயது 64. அடுத்த தேர்தலின் போது 69இல் – அவரது உடல் நலம் – ஜெயலலிதாவின் உடல் நலம் – இவையெல்லாம் ஒரு காரணியாக மக்கள் மனங்களில் விசுவரூபமெடுக்கும்.

மற்ற அரசியல் கட்சிகள் – அரசியல் மையங்கள் – சில சினிமா நடிகர்களின் அரசியல் பிரவேசங்கள் – இப்படி பல அம்சங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசியலின் எதிர்காலத்தையும் – அடுத்த முதல்வரையும் நிர்ணயிக்கும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்டாலினின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற செயல்பாடுகளும், அவரது அரசியல் அணுகுமுறைகளும், குடும்ப அரசியலை எந்த அளவுக்கு அவர் தவிர்க்கப் போகிறார் என்பதும்தான் அவரது எதிர்காலத்தை முடிவு செய்யும்.

-இரா.முத்தரசன்