கோலாலம்பூர் – பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்மொழிந்துள்ள ஹூடுட் சட்டங்கள் மீதான தனிநபர் நாடாளுமன்ற மசோதாவை மஇகா கடுமையாக எதிர்ப்பதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.ஷாரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் சட்ட அதிகார எல்லை) சட்டதிருத்த மசோதா 2016 என்ற ஹூடுட் மசோதாவை ஹாடி அவாங் தனிநபர் நாடாளுமன்ற மசோதாவாக சமர்ப்பித்துள்ளதை மஇகா எச்சரிக்கையோடு கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் சுப்ரா, நாட்டின் அரசியல் சாசனத்தின் கீழ் எல்லா மலேசியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு இந்த ஹூடுட் மசோதா எதிரானதாகும் என்றும், தான் விடுத்த பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஹூடுட் மசோதா, இரட்டை குற்றவியல் தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தனது பத்திரிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள சுப்ரா, ஷாரியா நீதிமன்றங்களுக்கான சட்டவிதியை மட்டும் இந்த தனிநபர் மசோதா திருத்த முற்படுகின்றது என்றும், என்றும் முஸ்லீம்கள் மீது மட்டுமே இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டாலும், இதன் காரணமாக, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மீதான மற்ற குற்றவியல் சட்டங்கள் மீதான தண்டனைகளுக்கும் இந்த மசோதா வழி செய்கின்றது என்றும் கூறியுள்ளார்.
“மஇகா கடுமையாக எதிர்க்கும்”
இந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால் இரண்டு வெவ்வேறு விதமான குற்றவியல் சட்ட நிர்வாகம் நடைமுறைக்கு வரும் என்பதாலும், முஸ்லீம்கள்-முஸ்லீம் அல்லாதவர்கள் என பாகுபாடு காட்டப்படும் தண்டனை முறைகள் அமுல்படுத்தப்படும் என்பதாலும், மஇகா இறுதிவரை இதனைக் கடுமையாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நமது நாட்டின் அரசியல் அமைப்பின் தூணாகத் திகழும் அரசியல் சாசனம் என்பது இரட்டை குற்றவியல் நிர்வாக நடைமுறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல், ஹாடி அவாங், முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத அனைத்து மலேசியர்களின் நலன்களையும் மனதில் வைத்து, உடனடியாக இந்த தனிநபர் மசோதாவை மீட்டுக் கொள்ள வேண்டும்” என்றும் சுப்ரா வலியுறுத்தியுள்ளார்.