Home Featured கலையுலகம் அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!

அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!

727
0
SHARE
Ad

kamalகோவை – அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் நின்று மக்களுக்கு பணி செய்தார் மகாத்மா காந்தி, என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த காந்தியின் சத்திய சோதனை புதிய மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது: “ஒரு காலத்தில் காந்தியை விமர்சனம் செய்த கூட்டத்தில் இருந்தவன் நான். பின்னர் அவரைப் பின்பற்றத் தொடங்கினேன்.

காந்தியாரை அறிந்து கொள்ள எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. அகிம்சையை பின்பற்றுவது சாதாரண விஷயம் அல்ல. அது பெரிய வீரம். யாராலும் எளிதாகப் பின்பற்ற முடியாது. ஆனால், முயற்சி செய்தால் அகிம்சை கொள்கையைப் பின்பற்ற முடியும்.

#TamilSchoolmychoice

காந்தி ஒரு தலைவனாக இல்லாமல் தொண்டனாக இருந்து பணியாற்றியதால்தான் உச்சத்தை அடைய முடிந்தது. மகாத்மா காந்தி ஒரு நாட்டின் தலைவராக இல்லாமலேயே உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் குடிமகனாகவும் திகழ்கிறார். அவரது புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடுவதும், அதைப் படிப்பதும் தேசத்துக்குச் செய்யும் பெரிய சேவை என நினைக்கிறேன்.

‘ஹேராம்’ திரைப்படத்தை தயாரிக்கும்போதுதான் காந்தி குறித்து பல அரிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். காந்தி, தன் எளிமையான வாழ்க்கை முறையால் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் சின்னமாக அவர் திகழ்கிறார்.

அரசியல் ரீதியாக காந்தியை அதிக அளவில் விமர்சனம் செய்த பெரியார்கூட, காந்தி இறந்தபோது விடுதலை நாளிதழில் அவரைப் பற்றி பெருமையாக தலையங்கம் எழுதியுள்ளது அகிம்சைக்கு கிடைத்த வெற்றி. எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது.

அவரை எந்தக் கட்சியுடனும் இணைத்துப் பார்க்கக் கூடாது. இந்தச் சமுதாயத்தின் நோயாக அரசியலும், மதமும் திகழ்கிறது என்பதால்தான் இவற்றுக்கு அப்பால் நின்று பணியாற்றினார் காந்தி” என கமல்ஹாசன் பேசினார்.