Home Featured இந்தியா விஜய் மல்லைய்யாவின் சொத்து விவரங்களை வங்கிகளிடம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

விஜய் மல்லைய்யாவின் சொத்து விவரங்களை வங்கிகளிடம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

508
0
SHARE
Ad

Vijay Mallya,புதுடெல்லி – விஜய் மல்லைய்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்து விவரங்களை, கடன் கொடுத்த வங்கிகளிடம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரத்து 400 கோடி கடனை திருப்பித் தராமல், லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய்மல்லைய்யாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதஹி வாதிடுகையில் கூறியதாவது:–

#TamilSchoolmychoice

உச்சநீதிமன்றம் கடந்த 7–ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை விஜய் மல்லைய்யா பின்பற்றவில்லை. அவர் இந்தியாவுக்கு வரும் தேதியை தெரிவிக்கவில்லை. கடன் கொடுத்த வங்கிகளுடன் தீர்வை எட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பிட்ட பணத்தை கட்டுவதற்கும் முன்வரவில்லை.

அவர் நீதியின் பிடியில் இருந்து தப்பிய குற்றவாளி. அவர் கண்ணாமூச்சி ஆடி வருகிறார். அவருக்கு திரும்பி வரும் எண்ணமே இல்லை. நீதிமன்றத்திடம் இருந்து எதையோ மறைக்கப்பார்க்கிறார். அவர் இந்த உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்களை, கடன் கொடுத்த வங்கிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவர் கூறினார்.

அதற்கு விஜய் மல்லைய்யா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பராக் திரிபாதி ஆகியோர் கூறியதாவது:– 2013–ஆம் ஆண்டு நிலவரப்படி, விஜய் மல்லைய்யாவின் ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவன மொத்த வங்கிக்கடன் ரூ.16 ஆயிரம் கோடி ஆகும்.

அவரது தனிப்பட்ட சொத்துகள் அடிப்படையில்தான் இந்த கடன்கள் கொடுக்கப்பட்டன. அந்த சொத்து விவரங்கள், வங்கிகளிடம்தான் உள்ளன. மல்லையாவின் கடன்களுக்கும், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

எனவே, அவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க உத்தரவிடக்கூடாது என அவர்கள் கூறினர். விஜய் மல்லைய்யா எப்போது இந்தியாவுக்கு வருவார்? என்று நீதிபதிகள் கேட்டதற்கு, ‘அதுபற்றி எங்களுக்கு தகவல் வரவில்லை’ என்று மல்லைய்யாவின் வக்கீல்கள் பதில் அளித்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:– விஜய் மல்லைய்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தெரிவிப்பதற்கு எழுப்பிய ஆட்சேபனையில் எந்த நியாயமும் இல்லை.

ஆகவே, அவர் தரப்பில், மூடிய உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து விவரங்களை, அவருக்கு கடன் கொடுத்த வங்கிகளிடம், உச்சநீதிமன்ற பதிவாளர் ஒப்படைக்க வேண்டும். இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான காரணம், மல்லைய்யாவுடன் வங்கிகள் அர்த்தமுள்ள, சாத்தியமான தீர்வை எட்டுவதற்குத்தான்.

மேலும், கடனை திரும்பப் பெற்றுத்தரக்கோரி, பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை 2 மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.