மதுரை – 4 மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிப்பதற்கான தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது.
இதற்காக மதுரை – சிவகங்கை சாலை சந்திப்பு சுற்றுச்சாலை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருகையொட்டி மதுரை – சிவகங்கை சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு முதல்வர் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 5 மணிக்கு வரவுள்ளார்.
கூட்டம் முடிந்து மீண்டும் விமானத்தில் சென்னை திரும்புகிறார் என்று கட்சியினர் தெரிவித்தனர். முதல்வர் வருகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.