வாடிகன், மார்ச்.16- உலகில் உள்ள தேவாலயங்கள் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் வளர வேண்டும் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் பிரான்ஸிஸ் கூறினார்.
16ம் பெனடிக்ட் ஓய்வு பெற்ற பின்னர் புதிய போப்பாக பதவியேற்ற பிரான்ஸிஸ். முதன் முதலாக வாடிகனில் உலக அளவிலான நிருபர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சர்வதேச நிருபர்களிடம் போப் பேசுகையில் ; எனது பெயர் பிரான்சிஸாக மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் இந்த பெயரில் வாழ்ந்த செயின்ட் பிரான்ஸிஸ் ஆப் அசில்ஸ்.அவர், மனிதனின் வறுமை, மனிதனின் அமைதியை முன் வைத்து வாழ்ந்தார். இதனால் இந்த பெயர் எனக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து தேவாலயங்களும் ஏழைகளுக்காகவே அமைய வேண்டும். அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காணும் இடமாக இருக்க வேண்டும்.
நான் தேர்வு செய்யப்பட்ட போது எனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த ஆயர்கள் என்னை முத்தமிட்டு ஏழைகளை மறந்து விடக்கூடாது என்றனர். நான் அந்நேரத்தில்செயின்ட் பிரான்ஸிசைத்தான் நினைத்தேன் என்றார். இது போல எனது பணியும் ஏழைகளை மையமாக வைத்தே இருக்கும் என்றார்.