வாடிகன்,மார்ச்.16-போப்பாண்டவராக இருந்த 16-ம் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய போப்பாண்டவராக அர்ஜென்டினாவின் பிரான்சிஸ் (77) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 19-ல் அவர் போப்-பாக பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்பது அவரது இயற்பெயர்.
ரயில்வேயில் பண்புரிந்த இவர் தந்தை குடும்பத்துடன் இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவுக்கு குடியெர்ந்தார். இவரது வீட்டுக்கு அருகில் அமாலியா தாமோந்த் என்ற சிறுமி தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். இருவருக்கும் அப்போது வயது 12தான்.
நண்பர்களாக இருந்த இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் அரும்பியது. ஒரு நாள் அமாலியாவிடம் ஜார்ஜ் மரியோ ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்ய விரும்புகிறேன் எனக் கூறியிருந்தார். படித்துப் பார்த்த அமாலியாவுக்கு அதிர்ச்சி. ஆனால், இருவரும் சிறு வயது என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடையில், ஒரு நாள் ஜார்ஜ் மரியோவை சந்தித்த அமாலியா, நான் திருமணம் செய்ய மாட்டேன்; துறவு மேற்கொள்ளப் போகிறேன் எனக் கூறினார். பின்னர் அவரது தந்தை அங்கிருந்து குடும்பத்தை காலி செய்துவிட்டு வேறு இடம் சென்றுவிட, இந்தக் காதல் அதனுடன் முறிந்து போனது. பின்னர் ஜார்ஜ் மரியோ பாதிரியார் ஆகிவிட்டார்.
ஆனால், அமாலியாவுக்கு திருமணம் நடந்து ஒரு மகனும் உள்ளார். தற்போது 77 வயதாகும் அமாலியா, புதிய போப்பாக ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். இளம் பிராயத்தில் ஜார்ஜ் மரியோவுடன் இருந்த நட்பையும், அவர் தன் மீது வைத்திருந்த காதலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜார்ஜ் மரியோ தன் வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டேனோ என்னவோ? அப்படித்தான் இருப்பதாகக் கருதுகிறேன். அவரது பதவி ஏற்பு விழாவைக் காண மகிழ்ச்சியாகக் காத்திருக்கிறேன் என்கிறார் அமாலியா.