லண்டன் – இப்போதைக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லைய்யா, அந்த கடனை திரும்பச் செலுத்தவில்லை. கடன் வாங்கிய பணத்தை தனது ‘கிங் பிஷர்’ விமான நிறுவனத்துக்காக அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்தது. 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இது தவிர வங்கிகள் அளித்த புகாரின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம், விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படியும் இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் 60 வயது விஜய் மல்லைய்யா, லண்டனில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கிங் பிஷர் விமான நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பிரச்சினையில் நியாயமான தீர்வைக் காண்பதற்கே விரும்புகிறேன்.
அதேநேரம் எனது பயணக்கடப்பிதழை (பாஸ்போர்ட்டை) முடக்குவதாலோ அல்லது என்னை கைது செய்வதாலோ என்னிடம் இருந்து எந்த பணத்தையும் அவர்களால் திரும்பப் பெற முடியாது. நான் நிச்சயமாக நாடு திரும்புவதற்கு விரும்புகிறேன்.
ஆனால், இப்போது அங்கு என் மீதான விஷயங்கள் மிக வேகமாகவும், சீற்றமாகவும் காணப்படுகிறது. எனது பயணக்கடப்பிதழை முடக்கி இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
தொடர்ந்து நான் இந்திய தேசப்பற்றுக் கொண்டவனாகவே இருப்பேன். ஆனால், அங்கு எனக்கு எதிராக கூக்குரல் தொடர்கிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் பாதுகாப்பாக இருப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே இப்போதைக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என விஜய் மல்லைய்யா கூறினார்.