சாம்போங்கா – அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 10 இந்தோனிசியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மலேசிய எல்லையான சுலுவில் விடுதலை செய்யப்பட்டனர்.
10 இந்தோனிசியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுலு காவல்துறைத் தலைவர் வில்பிரடோ சாயாட்டும் உறுதிசெய்துள்ளார்.
சுலு ஆளுநர் மாளிகை முன்பு அடையாளம் தெரியாத சில நபர்கள், அவர்களை அழைத்து வந்து விடுவித்துள்ளதாகவும் வில்பிரடோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 10 பேரும், கடந்த மார்ச் 28-ம் தேதி சுலு அருகே கடத்தப்பட்ட கப்பல் சிப்பந்திகள் என்பது தெரியவந்துள்ளது.
பீட்டர் டான்சன், ஜூலியன் பிலிப், ஆல்வின் எல்விஸ் பெட்டி, மாஹ்முட், சூரியன் சியா, சூரியாண்டோ, வாவான் சபுட்டிரியா, பாயு ஆக்டாவியாண்டோ, ரெய்னால்டி மற்றும் வெண்டி ராக்னாடியான் இவர்கள் 10 பேரும் இந்தோனிசியக் கப்பல் சிப்பந்திகள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இவர்களை விடுவிக்க அபு சயாப் இயக்கத்தினருக்கு 50 மில்லியன் (பிலிப்பைன்ஸ் மதிப்பில்) பிணைத்தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.